கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் நாளை (ஜூலை 9) நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் 14-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நாளை (ஜூலை 9) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 13, 14 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தையில் 9 செமீ, மேல் கூடலூர், குன்னூர், தேவாலாவில் தலா 8 செமீ, விண்ட் வொர்த் எஸ்டேட், அவலாஞ்சியில் தலா 7 செமீ, பந்தலூரில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது.