தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஜூன் 28-ல் கனமழை வாய்ப்பு

மு.வேல்சங்கர்

சென்னை: தமிழகத்தில் திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூன் 28-ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானியும், உயரதிகாரியுமான வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில்17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கி.மீ., உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 23) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 24-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 25-ம் தேதி முதல் வரும் 28-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 25-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 26-ம் தேதி வட கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

வரும் 27-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

வரும் 28-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் (ஜூன் 23, 24) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தென் தமிழக கடலோரப்பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதி, தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதி, கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதி, லட்சத்தீவு பகுதி, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஜூன் 27-ம் தேதி வரை பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மேற்படி நாட்கள் வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT