சோலைராஜா

 
தமிழகம்

மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா தவெக-வில் இணைய திட்டம்?

அதிமுக தலைமைக்கு சிக்கல்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: “எம்ஜிஆர், ஜெயலலிதா கூட செய்யாத நிலையில் முதல்வர் விஜய், விளையாட்டு வீரர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனாவை அமைச்சராக்கியது சரியான தேர்வு. அவரை பதவி விலக அதிமுக கூறுவது முட்டாள்தனமானது. இதற்காக என் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் சந்திக்கத் தயார்" என்று அதிமுக தலைமைக்கு மதுரை மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா சவால் விட்டுள்ளார். இதனால், அவரும் தவெக-வில் இணையத் திட்டமிட்டுள்ளாளரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மதுரை மாவட்ட அனைத்து விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் மதுரை எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரும், அனைத்து விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான சோலைராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது செய்தியாளர்கள், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டும் என்று அதிமுக எம்.பி. இன்பதுரை கூறியதை பற்றிக் கேட்டனர். அதற்கு சோலைராஜா, “தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விளையாட்டு சங்கங்களின் பொறுப்புகளில் இருந்து பதவி விலக வேண்டும் என அதிமுக எம்.பி. இன்பதுரை கூறியதற்கு மதுரை மாவட்ட அனைத்து விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வராக இருந்த ராஜாஜி, காமராஜர், பக்தவச்சலம், அண்ணா காலத்தில் இருந்து ஏன், எம்ஜிஆர், ஜெயலலிதா, பழனிசாமி, ஸ்டாலின் காலம் வரையில் யாருமே ஒரு விளையாட்டு வீரரை விளையாட்டுத்துறை அமைச்சராக்கவில்லை. ஆதவ் அர்ஜுனா, சென்னையில் விளையாட்டு விடுதியில் தங்கிப் படித்தவர். விளையாட்டு விடுதியின் கஷ்ட, நஷ்டங்களைப் பார்த்து வளர்ந்தவர். பேஸ்கட் பால் விளையாட்டில் மாநில விளையாட்டு வீரராக இருந்தவர்.

இதற்கு முன் விளையாட்டுத் துறை அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு விளையாடத் தெரிந்து இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு விளையாட்டுகள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு விடுதிகளில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் எதுவும் தெரியாது. ஆதவ் அர்ஜுனா பல கஷ்டங்களை விளையாட்டு வீரனாக இருந்து பார்த்து வளர்ந்தவர். முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவை விளையாட்டு அமைச்சராக நியமித்தது சரியான தேர்வுதான்.

இந்த கருத்தை நான் சொல்வதால் என் மீது கட்சித்தலைமை என்ன நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை. அப்படி நடவடிக்கை எடுத்தால் அது மூடத்தனமானது. என்னைப் பொறுத்தவரையில் கட்சி பெரிதா? விளையாட்டு பெரிதா? என்று கேட்டால் எனக்கு விளையாட்டும், அதன் சங்கங்களும்தான் முக்கியம். இதற்காக என்ன நடவடிக்கை எடுத்தாலும் சந்திக்கத் தயார். நான் விளையாட்டுத் துறையில் இருந்துதான் அரசியல்வாதியாக மாறினேன். அதனால், முதலில் விளையாட்டுத் துறைதான். அதற்கு பிறகுதான் அரசியல். விளையாட்டுத் துறையில் நான் நியாயத்தைதான் பேச முடியும்.

ஆதவ் அர்ஜுனா மாநில கூடைப்பந்து சங்கத்திலும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்திலும் நிர்வாகியாக உள்ளார். மேலும், இந்தியன் கூடைப்பந்து சங்கத்திலும் பொறுப்பில் உள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அமைச்சர் இப்படி பல பொறுப்புகளில் இருக்கிறார் என்பதை பார்த்து நாம் பெருமைப்பட வேண்டும்.

ஒலிம்பிக் சங்கத்தின் நிறை, குறைகள் அனைத்தும் அவருக்குத் தெரியும். அவர் விளையாட்டுதுறை அமைச்சரானது விளையாட்டு வீரர்களுக்கும், எங்களுக்கும் பெருமையாக உள்ளது. ஆனால், அரசியலுக்காக அவரை சங்கத்தில் இருந்து வெளியேறு என்று அதிமுக எம்.பி சொல்வது நியாயமில்லை. முட்டாள் தனமானது. அவர் சங்கத்தில் இருந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏற்கணவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள், தவெக-வுக்கு கட்சித் தாவி வரும் நிலையில் மதுரையிலும் டாக்டர் சரவணன், மதுரை மாநகரப் பொருளாளரும், மாணவர் அணியின் இணைச் செயலாளருமான குமார், மாவட்ட மாணவர் அணிசெயலாளர் பார்த்திபன், இணை செயலாளர் மாரநாடு போன்றவர்கள் தவெக-வில் இணைந்திருந்தனர்.

இந்தச் சூழ்நிலையில் தற்போது மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரான சோலைராஜா, அதிமுக கட்சியின் கருத்துக்கு எதிராகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவாகவும் பேசியதோடு, தன் மீது நடவடிக்கை எடுத்துப் பார்க்கட்டும் என்று கட்சித்தலைமைக்கே சவால் விடுவதின் பின்னணியில் அவரும், தவெக-வில் இணைய முடிவெடுத்ததைதான் காட்டுகிறது.

சோலைராஜாவும், ஆதவ் அர்ஜுனாவும், அரசியலுக்கு அப்பாற்ப்பட்டு விளையாட்டுத் துறை சங்க நடவடிக்கைகள், அதன் தேர்தல்களில் மிக நெருக்கமாக பணியாற்றியவர்கள். அதனால், அதிமுக தலைமை ஆதவ் அர்ஜுனாவை எதிர்க்கும் நிலையில் இவர், அவருக்கு ஆதரவாக களம் இறங்கியிருப்பது, கட்சித்தலைமைக்கும், மதுரை மாவட்ட அதிமுகவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT