சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: ‘அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை கடைசியாகப் பாட வேண்டுமென மத்திய அரசின் அறிவி்ப்பாணையில் எந்த இடத்திலும் வலியுறுத்தவில்லை’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாடுவதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலிலும், தேசிய கீதத்தை நிறைவாகவும் பாடி நிகழ்ச்சியை நடத்துவது பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபாக உள்ளது. ஆனால் சமீபகாலமாக இந்த நடைமுறையில் குளறுபடியை ஏற்படுத்தும் விதமாக தமிழகத்தில் நடைபெறும் மத்திய அரசு நிகழ்வுகளில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் முதலில் பாடப்பட்டு, அதன்பிறகு தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அரசு நிகழ்ச்சியை வந்தே மாதரம் பாடி தொடங்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜன.28 அன்று பிறப்பித்துள்ள சுற்றறிக்கையில், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை பாடி அரசு நிகழ்ச்சியைத் தொடங்க எந்த தடையும் விதிக்கவில்லை. ‘நீராரும் கடலுடுத்த’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வெறும் சடங்கு மட்டுமல்ல. அது ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வு, கலச்சாரம் மற்றும் அடையாளத்தின் எதிரொலிப்பு.
எனவே அரசு நிகழ்வுகளில் வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என வலியுறுத்தி, மத்திய அரசு பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் இந்த கலாச்சார மோதலைத் தவிர்க்கும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாடும் வகையில் தகுந்த நிர்வாக அறிவுறுத்தல்களை பிறப்பிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, “இதுதொடர்பாக புதிய அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல.
தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்வுகளில் வந்தே மாதரம் முதலில் பாடி, அதன்பிறகு தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை கடைசியாகத்தான் பாட வேண்டுமென அந்த அறிவிப்பாணையில் எந்த இடத்திலும் வலியுறுத்தவில்லை” என்றார். அதையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.