ராம்தாஸ் அத்வாலே
புதுச்சேரி: தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லையென்றால் தவெக தலைவர் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே புதுச்சேரிக்கு இன்று வருகை தந்து மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, அசாமில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இருக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வராது. அங்கு நடிகர் விஜய்யும் போட்டியிடுகிறார்.
தேர்தலுக்குப் பிறகு அங்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால் நடிகர் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை வீழ்த்திவிட்டு பாஜக ஆட்சி அமைக்கும்.
கேரளத்தில் இப்போது ஆளும் மார்க்சிஸ்ட் ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அங்கும் பாஜக ஆட்சி அமைக்கும். அதனால் தேர்தலுக்குப் பிறகு 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்.
நாகாலாந்து, மணிப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக எங்களை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. மேலும், தேசிய அங்கீகாரம் கிடைக்க கட்சியை வலிமைப்படுத்தி வருகிறோம்.
நாட்டின் வலிமையான பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியில் இருக்கிறார். நாட்டின் வளர்ச்சிதான் அவரின் குறிக்கோள். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது இந்திய குடியரசுக் கட்சியின் புதுச்சேரி தலைவர் ஞானமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.