உள்படம்: பேராசிரியர் மதன்
திருச்சி: விவசாயத்துக்கு பயன்படாத தரிசு நிலங்களில் சூரியசக்தி பேனல்கள் அமைத்து விவசாயிகளுக்கு உபரி வருமானம் அளிப்பது தொடர்பான திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியரின் யோசனையை ஏற்று, மத்திய அரசு செயல்படுத்திய பி.எம்.குஸூம் திட்டம் நல்ல வரவேற்பைபெற்றுள்ளதாக அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் க.மதன், செப்டம்பர் 4, 2017 அன்று பிரதமரின் அலுவலகத்துக்கு இணையம் மூலம் ஒரு விரிவான வளர்ச்சித் திட்ட முன்மொழிவைச் சமர்ப்பித்தார்.
அதில், விவசாயிகள் தங்களின் விவசாயம் செய்ய முடியாத தரிசு நிலங்களில் சூரிய சக்தி (சோலார்) பேனல்களை அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட, மானியத்துடன் கூடிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
இதன் மூலம் விவசாயிகள் ஒரு நிலையான உபரி வருமானத்தைப் பெறுவதற்கும், மின்சாரத்தை உற்பத்தி செய்து நேரடியாக அரசுக்கு விற்பனை செய்வதற்கும் வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் இந்த முன்மொழிவை செப்.8, 2017 அன்று ஏற்றுக்கொண்டது. பின்னர் மார்ச் 2019-ல், பி.எம். குஸும் (பிரதான் மந்திரிகிசான் ஊர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான் மகாபியான்) திட்டமாக அதிகாரப்பூர்வமாக நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது.
பிரதமரின் குறைதீர் மற்றும் ஆலோசனைக் கட்டமைப்பு என்பது வெறும் குறைகளைக் கேட்கும் தளமாக இல்லாமல், பொதுமக்களுடன் இணைந்து செயல்படும் ஒரு இருவழிப் பாதை என்பதற்கான சான்றாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மார்ச் 2019 முதல் இதுவரை 21.7 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். ஒரு ஏக்கர் தரிசு நிலத்திலிருந்து ஆண்டுக்கு குத்தகை தொகையாக ரூ.60,000 முதல் ரூ.80,000 வரை எந்த உழைப்புமின்றி சம்பாதிக்கின்றனர்.
பசுமை மின்சாரம் உற்பத்தி செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.