தமிழகம்

“சாதாரண மக்களின் வாக்குரிமையை மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் பறிக்கிறது” - காங்கிரஸ்

இ.மணிகண்டன்

விருதுநகர்: ஜனநாயக நாட்டில் சாதாரண மக்களின் சக்தி வாய்ந்த ஆயுதம் வாக்கு. அதை மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் பறிக்க நினைக்கிறது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளரும், தெலங்கானா எம்எல்ஏவுமான லட்சுமி காந்த் தொட்டா, தமிழக காங்கிரஸ் கமிட்டி ஊடகப் பிரிவு தலைவர் விஜய் வசந்த் எம்.பி ஆகியோர் தெரிவித்தனர்.

இதுகுறித்து விருதுநகரில் கூட்டாக அவர்கள் இன்று அளித்த பேட்டியில், “விருதுநகர் வரலாற்றுச் சிறப்பு மிக்க மண். பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊர். சமூக நீதிக்கு வெளிச்சம் காட்டியது தமிழகம், அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்று காமராஜரும், பெரியாரும் இந்த மண்ணில் முழக்கமிட்டனர். சமூக நீதியை நிலைநாட்டினர்.

வாக்கு என்பது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. சாதாரண ஜனநாயக நாட்டில் சாதாரண மனிதனின் சக்தி வாய்ந்த ஆயுதம் வாக்கு. அதை மத்திய அரசும், தேர்தல் ஆணையம் பறிக்க நினைக்கிறது.

பாஜக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதலாக வாக்குத் திருட்டிலும் வாக்காளர்கள் பட்டியலிலும் குளறுபடிகளை ஏற்படுத்தி வருகிறது. பாஜகவுக்கு தேர்தல் ஆணையமும் உதவி வருகிறது. மகாராஷ்டிராவில் மகதேவ்புரா தொகுதியில் மட்டும் பாஜக 1 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றது. ஆனால், அத்தொகுதியில் மட்டும் சுமார் 80 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். ஒரு வீட்டில் 80-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பது போன்ற மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தென் மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தத்திற்கு பிறகு சுமார் 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பாஜவை கண்டித்தும், தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் நவம்பர் 1-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அனுமதி பெறப்பட்ட நிலையில் தற்போது எந்த வகையில் அனுமதி மறுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. தொடர்ந்து, சாதாரண மக்களின் வாக்கு உரிமை பறிக்கும் நடவடிக்கையில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT