கிருஷ்ணசாமி | கோப்புப் படம்
கோவை: “ஒரு நாட்டின் குடிமகனின் வாக்குரிமை பறிக்கப்படுவது, ஜனநாயகத்திற்கு எதிரானது, கண்டனத்துக்குரியது. இதில் மத்திய அரசு மவுனம் காப்பது தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. மத்திய உள்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
கோவை குனியமுத்தூரில் உள்ள தனது இல்லத்தில் இன்று (அக். 18) செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, “தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், பிஹார் உட்பட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கடந்த ஒரு வருடமாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாக்காளர் திருத்த நடடிக்கைகளில், சுமார் 13 கோடி வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டிருப்பதாகக் கூறி டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஒரு நாட்டின் குடிமகனின் வாக்குரிமை பறிக்கப்படுவது, ஜனநாயகத்திற்கு எதிரானது, கண்டனத்துக்குரியது. இதில் மத்திய அரசு மவுனம் காப்பது தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் 5 முதல் 7 நீதிபதிகள் கொண்ட தனி அமைப்பை உடனடியாக அமைத்து, குறுகிய காலத்திற்குள் உண்மைத்தன்மையை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் 110 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் இந்த திருத்த முறைகேட்டின் காரணமாக மாற்றியமைக்கப்பட்டன என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அப்படி இருக்கும்போது இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராடுவதை விட்டுவிட்டு, தமிழகத்தை நோக்கி தங்களின் போராட்டக் களத்தை மாற்ற வேண்டும். கூட்டணி அரசியலுக்காக உண்மையை மூடிமறைப்பது நியாயமல்ல. எந்தெந்த தொகுதிகளில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் என்ற ஆதாரங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து பிரதான கட்சிகளுக்கும் அடிமட்ட அளவில் தீவிரமான கட்டமைப்பு உள்ளதால், எளிதாக வாக்காளர்களை நீக்கிவிட முடியாது. அதேசமயம் சிறப்பு திருத்த நடவடிகைகளின் காரணமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை முறையாகப் பயன்படுத்தாமல், படிவங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் வழங்கியதே இந்த குழப்பங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் முதன்மைக் காரணம்.
அரசு அதிகாரிகளை மட்டுமே கொண்டு இந்த பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். சிக்கிம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் லாட்டரி விற்பனை தொடர்பான வழக்குகளை எதிர்கொண்டு வரும் தொழில் குழுமங்களிடம் இருந்து பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக என அனைத்து முக்கியக் கட்சிகளும் பல நூறு கோடி ரூபாய் தேர்தல் நிதி பெறுவது ஜனநாயகத்துக்கு பேராபத்து.
ஒரு தொழில் குழுமம் ஒரே ஆண்டில், ரூ.150 கோடி நிதி அளிக்கும்போது, அவர்கள் மறைமுகமாக அரசு நிர்வாகத்தின் மீதும் கட்சிகள் மீதும் ஆதிக்கம் செலுத்த முற்படுகிறார்கள். இதுபோன்ற குழுமங்களிடம் இருந்து கட்சிகள் நிதி பெறுவதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். அவர்களது குடும்பத்தினருக்கு கட்சிப் பொறுப்புகளோ, மக்கள் பிரதிநிதித்துவப் பதவிகளோ வழங்கக் கூடாது.
நாகப்பட்டினத்தில் தவெக வழக்கறிஞரும், மாவட்டப் பொறுப்பாளருமான பூபாலன் வீட்டில் இருந்து சுமார் ரூ.800 கோடி மதிப்புள்ள 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஆட்சியில் இருப்பவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து வெறுமனே மேடைகளில் பேசுவதாலும், மெரினா கடற்கரையில் மாரத்தான் ஓடுவதாலும் எந்தப் பயனும் இல்லை.
போதைப்பொருளை ஒழிக்க வேண்டுமானால், முதலில் தங்களது கட்சியில் உள்ளவர்கள் இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை, உறுதி செய்து கட்சியைத் தூய்மைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அரசின் வரி வருவாய் குறைந்து வருவதோடு, வரும் காலங்களில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது” என்று தெரிவித்தார்.