காரைக்குடி: நாடாளுமன்றத்தை ‘ரப்பர் ஸ்டாம்பாக’ மாற்ற மத்திய அரசு சதி செய்வதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஏப்ரல் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நாடாளுமன்ற 2 அவைகளையும் கூட்டுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் வந்தது.
அதற்கு காங்கிரஸ் தலைவர் அனுப்பிய பதிலில், 106-வது அரசியல் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றிய பின்னர் 30 மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு தற்போது நாடாளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்திருக்கிறீர்கள். முதலில், நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பாகவும், என்ன மசோதா கொண்டு வர அரசு திட்டமிடுகிறது என்பது குறித்தும் பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாத்திருக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், அதை பொருட்படுத்தாமல் நாடாளுமன்றத்தை கூட்டுகின்றனர். மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தி, 543-லிருந்து 816 ஆக அதிகரிக்கும் மசோதாவும், தொகுதி மறுவரையறை மசோதாவும் கொண்டு வரப்போவதாக 2 தகவல்கள் வந்துள்ளன.
எனினும், மத்திய அரசு, காங்கிரஸ் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் இதுகுறித்து தகவல் இல்லை. இந்த 2 மசோதாக்களிலும் பேராபத்துகள் இருக்கின்றன.
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த 39 மக்களவை எம்பிகள் இருக்கின்றனர். மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 எம்பிக்களில் 28 பேர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
இந்த 67 எம்பிகளும் பாஜகவுக்கு எதிரான கருத்துடையவர்கள். தமிழகம், மேற்கு வங்கத்தில் தேர்தல் நடப்பதால் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்களால் பிரச்சாரத்தை விட்டுவிட்டு எப்படி நாடாளுமன்றத்துக்குச் செல்ல முடியும். இதை கருத்தில் கொண்டுதான் ஏப்ரல் 29 -ம் தேதி நாடாளுமன்றத்தை கூட்ட காங்கிரஸ் தலைவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், 67 பேர் பங்கேற்கக் கூடாது என்பதற்காகவே ஏப்ரல், 16 முதல் 18 வரை நாடாளுமன்றத்தை கூட்டுகின்றனர். இதேபோல் தமிழகம், மேற்குவங்க மாநிலங்களில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களில் ஒருசிலரை தவிர, மற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிரான கருத்தை உடையவர்கள்.
எம்பிகள் எண்ணிக்கையை உயர்த்துவது, தொகுதி மறுவரையறை செய்வது ஆகிய 2 மசோதக்களுக்கும் அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும். அதை திருத்த 2 அவைகளிலும் மூன்றில் 2 பங்கு ஆதரவு வேண்டும்.
மக்களவையில் 67 எம்பிகள், மாநிலங்களவையில் 25 முதல் 30 வரையிலான எம்பிகள் குறைந்தால், 2 அவைகளிலும் அரசியல் சாசனத் திருத்தம் நிறைவேறும் என்ற நம்பிக்கை அரசுக்கு இருக்கிறது. இது நம்பிக்கையா, நப்பாசையா என்று தெரியாது.
ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்த்து வாக்களித்தால் இந்த 2 அரசியல் திருத்த மசோதாகளும் தோற்றுப்போகும். பிரதமர், உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் ஆகியோருக்கு இது நன்கு தெரியும். அதனால் தான் தமிழகம், மேற்குவங்கத் தேர்தல் சமயத்தில் அவையை கூட்டுகின்றனர்.
இது சதி. அரசியல் சாசன மோசடி. நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரான மோசடி. தற்போது உத்தரபிரதேசத்தில் 80 மக்களவை தொகுதிகளும் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்த்தால் 40 தொகுதிகளும் உள்ளன. தற்போதே இதில் 40 தொகுதிகள் இடைவெளி உள்ளது. 50 சதவீதத்தை உயர்த்தினால், உத்தரபிரதேசத்தின் 80 தொகுதிகள் 120 ஆகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகள் 60 ஆகவும் உயரும். அப்போது இடைவெளி 60-ஆக மாறும்.
ஏற்கனவே தென்மாநிலங்களின் குரல்கள் ஓங்கி ஒலிப்பது கிடையாது. நாடாளுமன்ற மக்களவை எண்ணிக்கை அதிகமானால் இன்னும் குறைந்த அளவிலே தான் தென் மாநிலங்களின் குரல் ஒலிக்கும். இப்போதே நாடாளுமன்றத்தில் எம்பிகளுக்கு 10 நிமிடங்கள் தான் பேச வாய்ப்பு கிடைக்கிறது. எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரித்தால் 5, 6 நிமிடங்கள் கூட பேச முடியாது.
3 லட்சம் வாக்காளர்களின் பிரதிநிதியான எம்பிகளால் என்ன பேச முடியும்? இது நாடாளுமன்றத்தை ‘ரப்பர் ஸ்டாம்ப்’ ஆக மாற்றுவதற்கான முயற்சி. இதை நாங்கள் கண்டிக்கிறோம். திடமாக எதிர்க்கிறோம்” என்று தெரிவித்தார்.