தமிழகம்

‘தமிழக வளர்ச்சிக்கு ‘தடை’யாக மத்திய அரசு...’ - ஆளுநர் உரை கூறுவது என்ன?

செய்திப்பிரிவு

சென்னை: ‘தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிபந்தனைகளை விதித்து, அவற்றை செயல்படுத்த தடை விதிக்கிறது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது’ என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்துச் சென்றதன் காரணமாக, அந்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். தமிழக ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்:

> மத்திய அரசு எதிர்மறை மனப்பான்மையுடன் மாநில அரசை அணுகுவதால், மாநில அரசு திட்டங்களுக்கான அனுமதி, நிதி ஒதுக்கீடுகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவது கவலைக்குரியது. தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிபந்தனைகளை விதித்து, அவற்றை செயல்படுத்த தடை விதிக்கிறது. மேலும், அந்த திட்டங்கள் முற்றிலும் முடங்கும் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது.

> மிக்ஜாம், ஃபெஞ்சல் புயல்கள் போன்ற இயற்கை பேரிடர்களால் தமிழகம் பெரும் சேதத்தை சந்தித்தபோது, சொற்பமான தொகையை மட்டுமே மத்திய அரசு விடுவித்தது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்துக்கு ரூ.3,548 கோடியை மத்திய அரசு விடுவிக்காததால், அந்த திட்டங்களுக்குரிய முழு செலவையும் மாநில அரசே ஏற்றுள்ளது.

> ஜிஎஸ்டி விகிதங்களின் சீரமைப்பு காரணமாக மாநிலங்கள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வரும் நேரத்தில், மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கக் கூடிய வரி வருவாயை மடைமாற்றும் வகையில், மத்திய அரசு மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை விதிப்பதை தவிர்க்க வேண்டும்.

> மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் அடிப்படை நோக்கத்தை சிதைக்கும் வகையில் மத்திய அரசு அண்மையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. மாநில அரசின் திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த இயலாமல், நெருக்கடி தரும் காழ்ப்புணர்ச்சியின் அங்கமாகவே புதிய திட்டத்தை கருத வேண்டியுள்ளது. எனவே, புதிய திட்டத்தை திரும்பப் பெற்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஆதாரங்களை ஒதுக்கி, அதை வெற்றிகரமாக செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

> சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்திருப்பதன் மூலம், மெட்ரோ ரயில் திட்டத்திலும் தமிழகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகும் நிலையே காணப்படுகிறது.

> உயர்கல்வி நிறுவனங்களில் 3-ம் மூன்றாம் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்று யுஜிசி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மறைமுக இந்தி மொழி திணிப்பாக இதைக் கருத வேண்டியுள்ளது. எனவே, அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தக் கூடாது. தமிழின் பெருமையை உலகறியச் செய்யவும், தமிழகத்தின் உரிமைகளைப் போராடிப் பாதுகாக்கவும் ஓயாது உழைக்க தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது.

> இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும்.

‘முதன்மை மாநிலமாக தமிழகம்’

> தமிழகம் கடந்த நிதியாண்டில் 11.9 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை எட்டி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது. இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத சாதனையாகும். பொங்கல் திருநாளையொட்டி 2.23 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.3,000 ரொக்கம் உள்ளிட்ட ரூ.6,936 கோடி மதிப்பிலான பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

> தடுப்பூசி செலுத்துதல், ஆக்சிஜன் மற்றும் கூடுதல் படுக்கை வசதிகளை உறுதி செய்தல் போன்ற போர்க்கால நடவடிக்கைகளால், தமிழகம் கரோனா பிடியிலிருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டது. இந்தச் சாதனை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். 'மகளிர் விடியல் பயணம்' மூலம் பெண்கள் மாதம் ரூ.888 வரை சேமிக்கின்றனர். சுமார் 1.30 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்க இதுவரை ரூ.33,464 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

> உயர் கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நகரங்களுக்கு வரும் பெண்கள் நவீன வசதிகளுடன் நியாயமான கட்டணத்தில் பாதுகாப்பான தங்கும் வசதியைப் பெற 19 தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவிலேயே தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களை அதிகமாகக் கொண்ட (40.3 சதவீதம்) மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

> கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள 4.9 லட்சம் ஊரக மற்றும் நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.34 லட்சம் கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டு, பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் வருகையை உறுதி செய்யும் வகையில், 19.34 லட்சம் குழந்தைகள் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

> அயோத்திதாசப் பண்டிதர் மற்றும் தொல்குடி திட்டங்களின் கீழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் தலா ரூ.1000 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படுகின்றன. அம்பேத்கர் அயலக கல்வித் திட்ட நிதி ரூ.36 லட்சமாக உயர்த்தப்பட்டு, 385 மாணவர்கள் வெளிநாடுகளில் பயின்று வருகின்றனர். `காலனி' என்ற சொல் ஆவணங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நன்னிலம் மகளிர் நிலவுடைமை திட்டத்தின் மூலம் 1,026 ஆதிதிராவிடப் பெண்களுக்கு ரூ.50 கோடி மானியம் அளிக்கப்பட்டு, அவர்கள் நில உடைமையாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

> 27.55 லட்சம் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்த இதுவரை 3 லட்சம் இலவச வீட்டுமனை இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு இயக்கம் மற்றும் இளைஞர்களுக்கான அறவுணர்வுப் பயிலரங்கங்கள் மூலம் தமிழகத்தின் எதிர்காலம் உறுதி செய்யப்படுகிறது என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT