தமிழகம்

கரூர் வேலுசாமிபுரத்தில் மத்திய தடய அறிவியல் குழுவினர் ஆய்வு!

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: ஜன.12-ம் தேதி டெல்லி அலுவலகத்தில் ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள நிலையில் கரூர் வேலுசாமிபுரத்தில் மத்திய தடய அறிவியல் ஆய்வக (சிஎப்எஸ்எல்) குழுவினர் ஆய்வு நடத்தினர்.

கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியும், போனில் அழைத்தும், நேரில் சென்றும் பல்வேறு தரப்பினரிடையே விசாரணை நடைபெற்று வருகிறது.

நவ. 24, 25-ம் தேதிகளில் தவெக நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்றது. சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி ஏடிஜிபிக்கள் சோனல் வி.மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் டிச. 2, 3-ம் தேதிகளில் கரூர் வந்து விசாரணை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்களிடம் மனுக்கள் பெற்றனர்.

கரூர் ஆட்சியர் மீ.தங்கவேல், திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜோஷி நிர்மல்குமார், எஸ்பி கே.ஜோஷ்தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி செல்வராஜ், கரூர் நகர இன்ஸ்பெக்டர் ஜி.மணிவண்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக்குழு சம்பவ இடத்தை பார்வையிட்டு, தனியார் மருத்துவமனைகளில் விசாரணை நடத்திச் சென்றது.

கடந்த டிச.29-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆட்சியர் மீ.தங்கவேல், எஸ்.பி. கே.ஜோஷ் தங்கையா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சிடி நிர்மல்குமார் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.

டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஜன.12-ம் தேதி தவெக தலைவர் விஜய் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில் கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சாரம் நடந்த இடத்தில் இன்று (ஜன.9-ம் தேதி) காலை 11 மணி முதல் மத்திய உள்துறை அமைச்சரக விவகாரத்துறை அதிகாரி தலைமையில் மத்திய தடயவியல் அறிவியல் துறை ஆய்வகக் குழுவினர் 10-க்கும் மேற்பட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். சிபிஐ அலுவலர்கள் உடனிருந்தனர்.

அப்போது சாலையின் வலதுபுறத்தில் ராங் சைடில் விஜய்யின் வாகனம் சென்ற பகுதியில், காவல்துறையினர் விஜய் பிரச்சார வாகனத்தை நிறுத்தக்கூறிய இடம், விஜய் பிரச்சார வாகனம் நின்ற இடம். இவற்றிற்கு இடையே உள்ள தூரம் மற்றும் சாலையின் அகலம் ஆகியவற்றை இன்ச் டேப், குளோரின் தூள் மூலம் கோடு போட்டும், நவீன கருவியை பயன்படுத்தியும் அளவீடு செய்தனர்.

மேலும் அங்கிருந்த மரத்தின் சுற்றளவு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டி கடையின் நீளம் ஆகியவற்றை அளவீடு செய்தனர். அனைத்தையும் வீடியோ பதிவு மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜராக உள்ள நிலையில திடீரென மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகக் குழுவினர் ஆய்வு செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

SCROLL FOR NEXT