கோப்புப் படம்

 
தமிழகம்

மக்கள்தொகை கணக்கெடுப்பு களப்பணி இன்று தொடக்கம்

1.15 லட்சம் பேர் பணியில் ஈடுபடுகின்றனர்

செய்திப்பிரிவு

சென்னை: மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீடுகள் பட்டியல், வீட்டின் வசதிகள் கணக்கெடுப்பின் களப்பணிகள் இன்று தொடங்குகின்றன.

இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெறுகிறது. வீடுகள் பட்டியல், வீட்டின் வசதிகள் கணக்கெடுப்பு மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்று 2 கட்டங்களாக இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

மக்கள் நேரடியாக தங்கள் சுய விவரங்களை பதிவேற்றம் செய்யும் வகையில் சுய கணக் கெடுப்பு பணி கடந்த 17-ம் தேதி தொடங்கி நேற்று (ஜூலை 31) முடிவடைந்தது. இந்த வசதியைப் பயன்படுத்தி தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இணையதளம் வழியாக விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீடுகள் பட்டியல், வீட்டின் வசதிகள் கணக்கெடுப்பின் களப்பணிகள் இன்று (ஆக.1) தொடங்கி ஆக.30-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

அவர்கள் அனைத்து வீடுகளுக்கும் நேரில் வந்து கணக்கெடுப்பு நடத்துவார்கள். 33 கேள்விகள் கொண்ட கேள்விவித்தாளை கொண்டு, இப்பணி மேற்கொள்ளப்படும். வீடுகளின் நிலை, குடிநீர், கழிவறை, மின்சாரம், இணைய வசதி, சமையல் எரிபொருள், கழிவறை வசதி, வாகனங்கள் போன்ற முக்கிய தரவுகள் சேகரிக்கப்படும்.

இந்தியாவில் முதல்முறையாக இப்பணிக்கு நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. 1948-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி, சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டு, முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும். புள்ளி விவரப் பாதுகாப்பு, பொதுக் கொள்கை உருவாக்கம் ஆகியவற்றுக்காக மட்டுமே இந்த தகவல்கள் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT