சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான விசாரணையை விரைவில் சிபிஐ தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கை சென்னை காவல் துறை முதலில் விசாரித்தது. இந்த விசாரணையில் 30 பேர் மீது 7,411 பக்கங்கள்கொண்ட குற்றப் பத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்தது.
மேலும், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம், சீசிங் ராஜா ஆகிய இருவர் காவல் துறையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், காவல் துறையின் விசாரணையில் திருப்தி இல்லை என்றும், கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கே.இம்மானுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல் துறையின் விசாரணையில் உள்ள பல்வேறு குளறுபடிகளைச் சுட்டிக் காட்டியது. அதோடு, காவல்துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை ரத்து செய்த நீதிபதி, இவ்வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அப்போதைய தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனால் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முந்தைய அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தற்போதைய அரசு அண்மையில் திரும்பப் பெற்றுக் கொண்டது. இதனால், சிபிஐ விசாரணைக்கு இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கின.
முன்னதாக விசாரணை ஆவணங்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுவதாக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.
தற்போது இந்த வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளையும் சிபிஐ அதிகாரிகளிடம் காவல் துறை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது. இதன் அடிப்படையில், சிபிஐ விரைவில் புதிய முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, விசாரணையைத் தீவிரப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகிஇருக்கிறது.