கோப்புப் படம்
சென்னை: தமிழக மின்சார வாரியத்தில் மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடி முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் புகாரில் சிபிஐ வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கி உள்ளது.
தமிழக மின்சார வாரியம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடி முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்தது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது: தமிழ்நாடு மின்சார வாரியம், 25, 63, 100, 200, 250, 500 கி.வா. ஆம்பியர் மின்மாற்றிகள் கொள்முதல் செய்ய 2021-ம் ஆண்டு முதல், ஒப்பந்தம் கோரியது.
இதில் சுமார்30 நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த ஒப்பந்த புள்ளியில் பங்கேற்ற அனைத்து நிறுவனங்களும் ஒரே தொகையைக் குறிப்பிட்டு ஒப்பந்தம் கோரின.
உதாரணமாக, 2022-ம் ஆண்டு ஆக.12-ம் தேதி திறக்கப்பட்ட 1,000 எண்ணிக்கையிலான 200 கி.வா. ஆம்பியர் மின் மாற்றிகளுக்கான ஒப்பந்த புள்ளி கோரலில் 30 நிறுவனங்கள் கலந்து கொண்டன.
இந்த 30 நிறுவனங்களுமே ரூ.7,07,823-ஐ ஒப்பந்த தொகையாகக் கோரின. அதே ஆண்டு ஆக.11-ம் தேதி திறக்கப்பட்ட 3,000 எண்ணிக்கையிலான 100 கி.வா.ஆம்பியர் மின்மாற்றி ஒப்பந்தத்தில் 31 நிறுவனங் கள் கலந்துகொண்டன.
இதில் ஒரு நிறுவனம் ரூ.4,63,858-க்கு ஒப்பந்தம் கோர, மற்ற 30 நிறுவனங்களும் ஒரே தொகையாக ரூ.4,69,935-க்கு கோரியுள்ளன. ஒப்பந்த புள்ளி திறப்புக்கு முன்னதாக அனைவரும் இணைந்து கூட்டுச் சதிசெய்தால் மட்டுமே இது சாத்தியம்.
ஏனெனில் 800 எண்ணிக்கையிலான 500 கி.வா.ஆம்பியர் மின் மாற்றி ஒப்பந்தம் ரூ.12,49,800-க்கு இறுதி செய்யப்பட்டு 16 ஒப்பந்ததாரர்களுக்கு தலா 50 வீதம் பிரித்துக் கொடுக்கப் பட்டுள்ளது.
ஆனால், அதே காலகட்டத்தில் அதே தரத்தில் அதே மின்மாற்றியை ராஜஸ்தான் மாநில அரசு ரூ.7,87,311-க்கு கொள்முதல் செய்துள்ளது. இவை அனைத்தையும் ஒப்பிடும்போது, 500 கி.வா. அம்பியர் மின்மாற்றி ஒப்பந்தத்தில் மட்டும் ரூ.34 கோடி முறைகேடு நடந்துள்ளது.
அந்த வகையில் மின்மாற்றி தொடர்பான, 7 ஒப்பந்தங்களின் மூலம் ரூ.397 கோடி முறைகேடு நடந்துள்ளது என்று அந்த இயக்கம் புகார் கூறியது. மேலும் இந்த முறைகேட்டில் அப்போது திமுக அரசின் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, மின்வாரியத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் அறப்போர் இயக்கம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தது.
ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துவிட்டு, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசார ணைக்கு உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம் மனுத் தாக்கல் செய்தது. இதே கோரிக்கையுடன் அதிமுக நிர்வாகி சரவணன் என்பவரும் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கடந்த ஏப்ரல் 29-ம் தேதி உத்தரவிட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் உச் சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்த வழக்கின் ஆவணங்கள், சென்னை சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக சதி செய்தல், மோசடியில் ஈடுபடுதல் ஆகிய 2 பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.