விழுப்புரம்: செஞ்சியில் பாஜக பிரமுகர் வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கல்லடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. பாமகவில் இருந்தபோது வல்லம் ஒன்றியக் குழு தலைவராக இருந்த ஏழுமலை, தற்போது பாஜக வர்த்தகப் பிரிவில் நிர்வாகியாக இருக்கிறார். இவரது மகன்கள் ஆனந்தராஜ், ஆனந்தகுமார்.
இவர்களுக்கு கல்லடிக்குப்பத்தில் பிரம்மாண்ட வீடு, நாட்டார்மங்கலத்தில் வணிக வளாகக்கட்டிடம், திரையரங்கம், திருமண மண்டபம் மற்றும் சென்னை கீழ்கட்டளையில் திருமண மண்டபம், பல்பொருள் அங்காடி உள்ளிட்டவை உள்ளன.
இவற்றுக்கான தலைமை அலுவலகம் நாட்டார்மங்கலத்தில் உள்ள வணிக வளாகத்தில் இயங்குகிறது. ரூ.116 கோடி பணப் பரிமாற்றம் இந்நிலையில் கல்லடிக்குப்பத்தில் உள்ள வீடு, நாட்டார்மங்கலத்தில் உள்ள வணிக வளாகம் மற்றும் செஞ்சியில் உள்ள திரையரங்கம், திருமண மண்டபங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல, சென்னையில் உள்ள வர்த்தக நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற சோதனையில், அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.