புதுடெல்லி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி அவரது வீட்டுக்கு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை கோரியும், ரத்து செய்யக் கோரியும் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த செப். 10-ல் விசாரித்தது.
இதனிடையே, சிபிஐ விசாரணையை உத்தரவிட்டதை திரும்ப பெறக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது நேற்று நடைபெற்ற விசாரணையில், எதிர் மனுதாரர் ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சார்பில் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா ஆஜராகி, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்கின் கோப்புகளை சிபிஐயிடம் இதுவரை ஒப்படைக்கவில்லை. இதற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளோம் என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், அவமதிப்பு வழக்கை விசாாரிக்க முடியாது என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா ஆஜராகி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கோப்பை சிபிஐக்கு தமிழ்நாடு அரசு கொடுக்கவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. இந்த வழக்கின் அனைத்து அம்சங்களும் ஆராயப்பட்டு, சாட்சியங்கள பதிவு செய்யப்பட்ட வழக்கின் கோப்பு 7500 பக்கங்களை கொண்டதாக உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை குறித்து 6 பத்திகளில் நிராகரித்துள்ளதை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த விசாரணையின்போது குற்றப்பத்திரிகை ரத்து ஆகிவிடக்கூடாது என்பதில் முனைப்பு காட்டினோம் என்றார்.
ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர். வசந்த், வழக்கறிஞர்கள் ராகுல் ஷியாம் பண்டாரி, இந்த விவகாரத்தில் காவல்துறையின் மனுவை விசாரிக்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும்.
சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜன. 20-க்கு தள்ளி வைத்தனர்.