புதுடெல்லி: சீன விசா முறைகேடு கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான சிபிஐ வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டதுடன் பதிலளிக்க சிபிஐக்கும் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாபில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் தொடர்பாக, சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிந்தது.
மேலும் இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன் உள்ளிட்டோருக்கு எதிரான சிபிஐ வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கான உத்தரவை சிறப்பு நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்தது.
இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் ஜெயின், தற்போதைய நிலையில் குற்றச்சாட்டு பதிவுக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்ததுடன் இந்த மனுவுக்கு பதில் அளிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளார்.