தமிழகம்

விஜய்யின் கோரிக்கையை ஏற்றது சிபிஐ - பொங்கலுக்குப் பின் மீண்டும் விசாரணை!

கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் முதல் நாள் விசாரணை நிறைவு

வெற்றி மயிலோன்

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் தவெக தலைவர் விஜய்யின் கோரிக்கையை ஏற்ற சிபிஐ, நாளைய விசாரணையை ஒத்திவைத்துள்ளது. பொங்கல் பண்டிகைக்குப் பின் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய்யிடம் இன்று நடத்தப்பட்ட விசாரணை நிறைவுபெற்றது. அவரிடம் நாளையும் விசாரணை நடத்தப்படவிருந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி கட்சி நிகழ்ச்சிகள் இருப்பதால் நாளைய விசாரணைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என விஜய் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விஜய்யிடம் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் இன்னும் ஒரு நாள் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால், பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி நாளைய விசாரணையில் இருந்து விஜய்க்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு பிறகு நேரில் ஆஜராக வேண்டும் என்ற சிபிஐயின் அறிவுறுத்தலை விஜய் ஏற்றுக் கொண்டதை அடுத்து, அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் நாளை காலை அவர் சென்னை திரும்புகிறார். விஜய்யிடம் மீண்டும் விசாரணை நடத்தவுள்ள தேதியின் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரித்து வருகிறது. பல்வேறு தரப்பினரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக நிர்வாகிகளிடம் நவ.24. 25-ம் தேதிகளில் விசாரணை நடைபெற்றது. சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டிஜிபிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித்சரண் ஆகியோர் டிச.2, 3-ம் தேதிகளில் கரூர் வந்து விசாரணை குறித்து ஆய்வு செய்தனர். மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், ஐ.ஜி.ஜோஷி நிர்மல்குமார், எஸ்.பி. ஜோஷ் தங்கையாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ கடந்த ஜன.6-ம் தேதி சம்மன் அனுப்பியது.

அதன்படி, இன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு விஜய் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கு தொடர்பாக, கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர். நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் ஏற்கெனவே சுமார் 20 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT