தமிழகம்

செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

இரா.தினேஷ்குமார்

விழுப்புரம்: செஞ்சி சிறுமி மாயமான வழக்கில், சிறுமியின் பெற்றோர் மற்றும் கிராம மக்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 12-ம் தேதி மாயமானார். பிறந்தநாள் கொண்டாடிவிட்டு கடந்த 11-ம் தேதி இரவு தங்களுடன் தூங்கிய மகளை காணவில்லை என தாயார் கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

எஸ்பி மதிவாணன் மேற்பார்வையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமியை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டது. நீர்நிலைகள், காடு, குப்பைமேடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிறுமியை தேடினர். 600-க்கும் மேற்பட்ட செல்போன் பதிவுகள் மற்றும் நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆகியவற்றை தனிப்படை போலீஸார் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

தொடர்ந்து 10 நாட்களாக தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. அறிவியல் பூர்வமான தடயங்கள் ஏதும் கிடைக்காததால் தனிப்படை போலீஸாரின் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சந்தேகத்தின் பெயரில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டும் துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறினர்.

இந்நிலையில், சிறுமியை கண்டுபிடிப்பதில் மெத்தனமாக செயல்படுவதாகக் கூறி திமுக சார்பில் ஆலம்பூண்டி ஊராட்சியில் அக்டோபர் 22-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் உள்ளூர் காவல்துறையின் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டுமென திமுக ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தது.

இதற்கிடையில் சிறுமி மாயமான வழக்கை நேற்று (அக்.21) இரவு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். இதை அடுத்து விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி கீதா தலைமையில் இன்று (அக்.22) ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பிறகு ஆலம் பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்திற்குச் சென்று சிறுமியின் பெற்றோர் மற்றும் கிராம மக்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT