வருண்குமார், வி.விக்ரமன், பி.ரகுபதி

 
தமிழகம்

சிபிசிஐடி டிஐஜி வருண்குமார் அதிரடிப்படைக்கு மாற்றம்: 2 ஐபிஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டனர்

செய்திப்பிரிவு

சென்னை: சிபிசிஐடி பிரிவு டிஐஜி வருண்குமார் அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து மேலும் 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் சிபிசிஐடி பிரிவு முக்கிய சிறப்பு புலனாய்வு பிரிவாக உள்ளது. மேலும் மாநில அரசு அல்லது நீதிமன்ற உத்தரவின் பேரில் உள்ளூர் போலீசாரிடம் இருந்து முக்கிய வழக்குகளை ஏற்று மறுவிசாரணை மேற்கொள்வதுடன், நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஆதாரங்களை சேகரித்து, குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தி, பாதிக்கப்பட்ட வர்களுக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இப்பிரிவில் பெரும்பாலும் திறமையானவர்களே நியமிக்கப்படுவார்கள். சர்ச்சையில் சிக்குபவர்கள், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் இந்த பணியிடத்தில் நீடிப்பது இல்லை. அவர்கள் உடனடியாக பணியிடம் மாற்றப்படுவார்கள். மேலும், முக்கிய பதவிகளில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் வேறு ஏதேனும் விவகாரங்களில் சிக்கினால், அவர்கள் சிறப்பு பிரிவான தமிழ்நாடு காவல் சிறப்பு அதிரடிப்படைக்கு (அதிகாரம் குறைந்த பதவி) மாற்றப்படுவார்கள்.

பதவி அந்தஸ்து குறைப்பு: இந்நிலையில், சென்னை சிபிசிஐடி பிரிவு டிஐஜி-யாக இருந்த வி.வருண்குமார் ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டிஐஜி-யாக மாற்றப்பட்டுள்ளார். ஐஜி அந்தஸ்தில் இருந்த இந்த பதவி டிஐஜி அந்தஸ்துக்கு குறைத்து வருண் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த சென்னை சிபிசிஐடி பதவிக்கு டிஐஜியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட் டிருந்த வி.விக்ரமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல்,காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி பி.ரகுபதி, தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள பள்ளிக்கரணை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை செயலர் கே.மணிவாசன் நேற்று பிறப்பித்தார்.

SCROLL FOR NEXT