தமிழகம்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் முழக்கம்

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: விவசாயிகளுக்கு துரோகம் ஏற்படுத்துவதை தடுக்கும் அரசியல் கட்சிகளுக்கு மட்டும் வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஆதரவு தருவோம் என விவசாயிகளின் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு, வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவேந்தலில் விவசாயிகள் உறுதி மொழி எடுத்துள்ளனர்.

கும்பகோணம் வட்டம், ஏராகரத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உழவர்களின் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு, வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஆகியோரது நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழவாறு பாசன சங்கத் தவைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் சின்னதுரை, வட்டத் தலைவர் ஆதிகலியபெருமாள், நிர்வாகி ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன் மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று, அவர்களது உருவப்படத்திற் முன் மெழுகுவர்த்தி ஏந்தி புகழஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, விவசாயிகள், மின்துறை ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் அனைத்து பொதுமக்கள் நலனிற்கு விரோதமாக, தனியார் பெரு நிறுவனங்களுக்கு ஆதரமாக மின்துறையை முற்றிலும் தனியார் மயமாக்கி, வேளாண் பொருட்கள் உற்பத்திக்கான மின்சாரத்துக்கு மத்திய அரசு மின் கட்டணம் விதிக்க உள்ளது.

எனவே, விவசாயிகளின் உரிமையை பறிக்கும், விவசாயிகளுக்கு துரோகம் ஏற்படுத்துவதை தடுத்திடும் அரசியல் கட்சிகளுக்கு மட்டும் வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஆதரிப்பது என உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர்.

SCROLL FOR NEXT