மேட்டூர் அருகே கொளத்தூர் அடுத்த மிளகாய்பொதை பகுதியில் வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை

 
தமிழகம்

மேட்டூர் அருகே 3 மாதங்களாக கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை சிக்கியது: மக்கள் நிம்மதி

த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அருகே கடந்த 3 மாதங்களாக கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதனால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.

மேட்டூர் அருகே கண்ணாமூச்சி கிராமத்தில் விவசாயிகள் பலர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக கண்ணாமூச்சியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை விவசாயிகள் வளர்ந்து வரும் கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அச்சமடைந்தனர். இதுவரை சிறுத்தை தாக்குதலில் சுமார் 20 ஆடுகள், 2 மாட்டுக் கன்றுகள், 3 வளர்ப்பு நாய்கள் மற்றும் 15 வளர்ப்பு கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடியது.

இதனிடையே, சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கையில் மேட்டூர் வனச்சரக அலுவலர் செங்கோட்டையன் தலைமையிலான வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மேட்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மிளகாய்பொதை, காவலாண்டியூர், நஞ்சுண்டபுரம், செட்டியூர், நெடுஞ்செழியன் நகர் மற்றும் மூலக்கடை மஞ்சமெத்தை ஆகிய 5 இடங்களில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமரா அமைத்தனர். அதேபோல், ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் பகுதியிலும் சிறுத்தை நடமாட்டம் இருந்ததால், அம்மாவட்டத்தின் சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட மசக்கவுண்டனூரிலும் ஒரு கூண்டு அமைக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டையில் இருந்து இரண்டு கூண்டுகளும், ஓசூரில் இருந்து ஒரு கூண்டும், பாலக்கோட்டில் இருந்து ஒரு கூண்டும் மற்றும் சத்தியமங்கலத்தில் இருந்து ஒரு கூண்டு என மொத்தம் 5 கூண்டுகள் வைக்கப்பட்டன. கூண்டில் ஆட்டை கட்டி வைத்து சிறுத்தையை பிடிப்பதற்கான பணியில் சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட வனத்துறையினர் ஈடுபட்டனர். இதனிடையே, கண்ணாமூச்சியை அடுத்த மிளகாய்பொதை பகுதியில் ஆட்டை கட்டி வைத்த கூண்டில் சிறுத்தை நேற்றிரவு சிக்கியது.

இதையடுத்து, இன்று காலை கூண்டில் இருந்து சத்தம் கேட்ட நிலையில் வனத்துறையினர் வந்து பார்க்கும் போது, சிறுத்தை கூண்டில் சிக்கியது தெரியவந்தது.

இதுகுறித்து மேட்டூர் வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் அம்புல்கர் யஷ்வந் ஜெகதீஸ் சம்பவ இடத்திற்கு வந்து கூண்டில் பிடிப்பட்ட சிறுத்தையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, கால்நடை மருத்துவர் மூலம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுத்தனர். சிறுத்தை சிக்கியதையடுத்து அப்பகுதி மக்கள் சிறுத்தை பார்க்க குவிந்து வருகின்றனர். மேலும், 3 மாதங்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை சிக்கியதால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.

SCROLL FOR NEXT