சென்னை அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.8 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள கேத்லேப் கருவியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார். இந்நிகழ்வில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி, மருத்துவமனை இயக்குநர் டாக்டர் மணி, இதயவியல் துறை தலைவர் டாக்டர் செசிலி மேரி மெஜில்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னை: அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் நேற்று ரூ.8 கோடியிலான புதிய கேத்லேப் கருவியை மக்கள் பயன்பாட்டுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அர்ப்பணித்தார்.
பின்னர், அமைச்சர் கூறியதாவது: உலகம் முழுவதும் இதய நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் 2 கேத்லேப், அதாவது, 2 இருதய வடிகுழாய் ஆய்வகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
அதேபோல், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 கேத்லேப், சென்னை பெரியார் அரசு மருத்துவமனையில் 1 கேத்லேப், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1 கேத்லேப் அமைக்கப்பட்டது. அந்த வகையில், இந்த மருத்துவமனையையும் சேர்த்து இதுவரை 7 கேத்லேப் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
விரைவில் கடலூர், நீலகிரி, திருவள்ளுர், திருவண்ணாமலை, ராமநாதபுரம் ஆகிய 5 இடங்களில் புதிய கேத்லேப் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு அடைப்புகளை உடனடியாக அகற்றி ரத்த ஓட்டத்தை சீராக்க கேத்லேப் கருவி உதவுகிறது.
இதய பாதிப்பு உள்ளானவர்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் இதயநாள அடைப்புகளை அகற்றுவதற்கும், இதயதுடிப்பு குறைபாடுகளுக்கான சிகிச்சைக்கும் கேத்லேப் பயன்படுகிறது.
ஏற்கெனவே, இந்த மருத்துவமனையில் கேத்லேப் கருவி ஒன்று பயன்பாட்டில் இருந்தாலும், தினமும் அதிகம் பேர் இதய சிகிச்சைக்கு வருவதால் இன்னொரு கேத்லேப் கருவி ரூ.8 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் கேத்லேப் சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் வரை செலவாகும். இந்த மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது.
மதுரை எய்ம்ஸ்: மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முடியும் தருவாயில் இருப்பதாக சொல்ல முடியாது. முழுமையாகபணிகள் முடிவடைவதற்கு 2028-ம் ஆண்டு இறுதியாகும். எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 50 மாணவர் சேர்க்கைக்கு முதல்வர் ஒத்துழைப்பு தந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர்களை சேர்க்க வைத்து வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வோர் ஆண்டும் 50 மாணவர்கள் என்ற வகையில் கடந்த 4 ஆண்டுகளாக அம்மாணவர்கள் மாநில அரசு மருத்துவ கல்லூரியில் தான் படித்து வருகிறார்கள். எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை பார்க்காமலேயே, மருத்துவ கல்லூரி படிப்பை முடித்து வெளியில் செல்பவர்களாக அவர்களது நிலை இருக்கிறது என்றார்.
இந்நிகழ்வின் போது, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் மணி, இதயவியல் துறை தலைவர் செசிலி மேரி மெஜில்லா ஆகியோர் உடன் இருந்தனர்.