அரியலூர்: அரியலூர் அரசுப் பள்ளியில் சாதிய பிரச்சினைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மறியல் மற்றும் முற்றுகையில் ஈடுபட்ட விசிகவினர் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தத்துனுர் கீழவெளி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அந்தக் கிராமத்தைச் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த 260-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியின் தலைமையாசிரியராக முருகன், ஆய்வக உதவியாளராக கண்ணதாசன், சமூக அறிவியல் ஆசிரியராக ரவிச்சந்திரன் உள்ளிட்ட 21 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தலைமையாசிரியர், ஆய்வக உதவியாளர் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்களிடையே சில மாதங்களாக சாதிய கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனை மாணவர்களிடம் ஆசிரியர்கள் வெளிபடுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி மேலாண்மை குழு மற்றும் கிராம பொதுமக்கள், ஆட்சியர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரியிடம் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகோபால் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மேற்கண்ட பள்ளியில் நவ.18-ம் தேதி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தலைமை ஆசிரியர் முருகன், ஆய்வாக உதவியாளர் கண்ணதாசன், சமூக அறிவியல் ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் கருத்து வேறுபாட்டுடன் பணிபுரிந்து வருவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து தலைமையாசிரியர் முருகன் ஸ்ரீபுரந்தான் பள்ளிக்கும், ஆய்வக உதவியாளர் கண்ணதாசன் காமரசவல்லி பள்ளிக்கும், சமூக அறிவியல் ஆசிரியர் ரவிச்சந்திரன் பரணம் பள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பள்ளியில் சாதிய வன்கொடுமைக்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு விசிக மேற்கு மாவட்டச் செயலாளர் சிவா தலைமையில் அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட 75 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
தொடர்ந்து 12 மணியளவில் கிழக்கு மாவட்டச் செயலாளர் கதிர்வளவன் தலைமையில் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்த விசிகவினர் ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், சாதிய வன்கொடுமைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அலுவலக வாயில் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்ணாடி உடைப்பு:
அப்போது, ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் முகப்பில் உள்ள கண்ணாடியை அக்கட்சியினர் உடைத்தனர். இதையடுத்து அலுவலகத்தின் அனைத்து முகப்பு கதவுகளையும் போலீஸார் மூடினர்.
தொடர்ந்து, மாவட்ட எஸ்பி சு.செல்வகுமார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும், விசிகவினர் தொடர்ந்து கோஷங்களை எழுப்பிய நிலையில், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர் 70 பேரை வலுகட்டாயமாக போலீஸார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.