பிரதிநிதித்துவ படம்

 
தமிழகம்

தேர்தல் திருவிழாவால் மதுரை வாக்காளர் காட்டில் அடைமழை - நடப்பது என்ன?

வெளிப்படையாகவே பணம் பட்டுவாடாவில் இறங்கிய கட்சியினர்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாவட்டத்தில் சாலைக்கு, சாலை நின்று வாகனங்களை பரிசோதனை செய்யும் தேர்தல் அலுவலர்கள், குடியிருப்புகளில் வெளிப்படையாக கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை கண்டும், காணாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் பட்டுவாடா செய்வதைத் தடுக்கவும், அவற்றை வாகனங்களில் கடத்துவதை தடுக்கவும் தொகுதிக்கு 9 பறக்கும் படையினர், 9 நிலையான கண்காணிப்புக் குழுவினர் என மொத்தம் 90 பறக்கும் படையினர், 90 நிலையான கண்காணிப்புக் குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், தேர்தலுக்கு முன்பே முக்கிய அரசியல் கட்சியினர், தேர்தல் செலவுக்கும், வாக்காளர்களுக்கு வழங்குவதற்கும் பணத்தை தொகுதிகளில் கொண்டு போய் பதுக்கி வைத்து விட்டனர். நிலையான கண்காணிப்புக் குழுவினரும், பறக்கும் படையினரும் சாலைகளில் சென்று பரிசோதனை செய்ததில் இதுவரை மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் கடத்தியதாக பணம், பொருட்கள் பிடிக்கப்படவில்லை.

10 தொகுதிகளில் பொதுமக்கள் விழிப்புணர்வு இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2 கோடியே 88 லட்சத்து 18 ஆயிரம் மட்டும் பறிமுதல் செய்தனர். இதுதவிர மது பாட்டில்கள், ரூ.51 கோடி மதிப்பள்ள நகைகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள், தொகுதிகளில் தாங்கள் பதுக்கி வைத்த பணத்தை, கடந்த 2 நாட்களாக வாக்காளர்களுக்கு வெளிப்படையாக இரண்டு அல்லது மூன்று பேர் குழுவாக வாக்காளர் பட்டியலுடன் வீடு, வீடாகச் சென்று ரூ.1,000 வீதம் விநியோகம் செய்து வருகிறார்கள். ஆனால், தேர்தல் கண்காணிப்பு குழுவினர், தற்போது வரை தொகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தாமல் சாலைகளில் ஒப்புக்கு வாகனச் சோதனை செய்கிறார்கள்.

இத்தனை கோடி பணமும் சாலை மார்க்கமாகத்தானே கட்சியினருக்கு வந்து சேர்ந்துள்ளது. தேர்தல் பறக்கும்படைக்கு தெரியாமல் இருந்தது எப்படி என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

இதுகுறித்து அரசியல் கட்சியினர் கூறுகையில், “வாக்காளர் பட்டியில் உள்ளவர்களை மூன்று விதமாக பிரிக்கிறோம். தங்களுக்கு வாக்களிக்கக் கூடிய கட்சியினர் உள்ள வாக்காளர்கள் பட்டியல், நமக்கு வாக்களிக்கவே மாட்டார்கள் என்பவர்கள் உள்ள பட்டியல், அடுத்ததாக நடுநிலை வாக்காளர் பட்டியல் ஆகிய மூன்று விதமான பட்டியலை எடுக்கிறோம்.

இவற்றில் ஆளும் கட்சியினர், தங்களது சொந்த கட்சியினர், நடுநிலை வாக்காளர்கள், எதிர்கட்சியினரை சேர்ந்த சிலருக்கும் பணம் விநியோகம் செய்கின்றனர். ஆனால், அதிமுகவினர், தங்கள் கட்சியினரை சேர்ந்த வாக்காளர்கள், நடுநிலை வாக்காளர்களுக்கு மட்டும் கொடுக்கிறார்கள்.

இந்த அடிப்படையில் ஆளும்கட்சியினர் 60 முதல் 75 சதவீதம் வாக்காளர்களுக்கும், அதிமுகவினர் 60 சதவீதம் பேருக்கும் தலா ரூ.1,000 வீதம் விநியோகம் செய்து வருகின்றனர். நாளையுடன் இரு கட்சியினரும் பணத்தை விநியோகம் செய்து முடித்து விடுவார்கள்.

திமுகவை பொறுத்தவரை போட்டி அதிகம் உள்ள தொகுதிகள், அதிக முன்னணியில் வெற்றிபெற விரும்பும் முக்கிய திமுக வேட்பாளர்கள் இரண்டாம் கட்டமாகவும் ரூ.500 அல்லது ரூ.1,000 வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இரு கட்சியினரிடமும் வசதி உள்ளவர்கள், வசதியில்லாதவர்கள் என பாரபட்சமின்றி வாக்குக்கு பணம் பெற்று வருகிறார்கள். மிக ஒற்றுமையாக இரு கட்சியினரும் எழுதப்படாத ஒப்பந்தம் செய்து கொண்டு பணம் விநியோகம் செய்வதால், இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்துக்கு புகாராக வரவில்லை.

இரு தரப்பிலும் பணம் விநியோகிக்கும் திட்டம் இருப்பதும், மாறாக புகார் அளித்தால் வாக்காளர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதாலும் புகார் தர முன்வருவதில்லை. பணம் விநியோகம் ஜோராக நடந்துவரும் நிலையில், பறக்கும்படையினர் சாலைகளில் நின்று பரிசோதனை செய்வதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைத்து பணம் விநியோகத்தை கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள்” என்றனர்.

SCROLL FOR NEXT