தமிழகம்

ரூ.42 கோடிக்கு ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு படைகளின் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.42 கோடி மதிப்பு ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. விதிமீறல்களை கண்காணிக்க தமிழகம் முழுவதும் தலா 2,106 பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

          

நேற்றைய நிலவரப்படி மொத்தம் ரூ.42.65 கோடி மதிப்பில் ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரொக்கமாக ரூ.2.37 கோடி, மதுபானம் ரூ.18 லட்சம், போதைப்பொருட்கள் ரூ.2.88 கோடி, விலைமதிப்பற்ற உலோகங்கள் ரூ.16.42 கோடி, இலவசமாக வழங்க வைத்திருந்த பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் ரூ.20.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் அமலாக்க முகமைகள், சட்டவிரோதப் பணப் புழக்கம், வாக்காளர்களைக் கவர வழங்கப்படும் இலவசப் பொருட்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

4 லட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 4 லட்சம் தேர்தல் பணியாளர்களை உள்ளடக்கிய பல்வேறு அலுவலர்களுக்கு விரிவான மற்றும் கட்டமைக்கப்பட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 6,803 மண்டல அதிகாரிகள், 75,032 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 2,25,096 வாக்குச் சாவடி அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து நிலைகளிலும் உள்ள தேர்தல் தொடர்புடைய அலுவலர்கள் முறையாகப் பயிற்சி பெற்று, தேர்தலை சுதந்திரமான, நியாயமான மற்றும் திறமையான முறையில் நடத்துவதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதை உறுதி செய்வதே இந்தப் பயிற்சித் திட்டத்தின் நோக்கம் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT