தமிழகம்

தொழிலாளர்கள், மாணவர்கள் மீதான வழக்குகளையும் வாபஸ் பெறுக: மார்க்சிஸ்ட்

வெற்றி மயிலோன்

சென்னை: ‘நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய மற்ற பிரிவினர் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். நன்செய் நிலங்களை வேறு பணிகளுக்கு மாற்றுவதற்கு உள்ளாட்சி மன்றங்களுக்கு உள்ள அதிகாரத்தை பறிக்கும் சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும்’ ஆகிய தீர்மானங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் செப்டம்பர் 2, 3 தேதிகளில் சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான பி.ஆர்.நினைவகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நன்செய் நிலங்களை வேறு பணிகளுக்கு மாற்றுவதற்கு உள்ளாட்சி மன்றங்களுக்கு உள்ள அதிகாரத்தை பறிக்கும் சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும்.

செப்டம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவையில் தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தில் திருத்தம் முன்மொழியப்பட்டது. இந்த திருத்தம் தேவையற்றதும் தவறானதுமாகும். ஏற்கெனவே, நன்செய் நிலங்களை வேறு பணிகளுக்கு மாற்றுவதற்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம் ஊராட்சி மன்றத்திற்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாகவும், ஆகவே, நகர திட்ட இயக்குநருக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை மாற்றுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்க காலதாமதம் ஆகிறது என்றால் மாநிலம் முழுவதற்கும் இயக்குநர் ஒருவரே ஒப்புதல் வழங்குவது என்றால் மேலும் காலதாமதம் தானே ஆகும். எனவே, இது ஏற்புடைய காரணமல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

நிலம் சம்பந்தமான விவரங்கள், ஆவணங்கள் அதற்குரிய பயிற்சி பெற்ற அதிகாரிகள் வருவாய்த்துறையில் தான் உள்ளனர். எனவே, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் உள்ள அதிகாரத்தை இயக்குநருக்கு மாற்றுவதும் தவறானது. மேலும், உள்ளாட்சி மன்றங்களுக்கு உள்ள அதிகாரத்தை பறிக்கும் வகையில் இந்த திருத்தம் உள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசால் முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்ட திருத்தத்தை கைவிட வேண்டுமென்றும், ஏற்கெனவே உள்ளபடி மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி மன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டுமென்ற நிலை தொடர வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய மற்ற பிரிவினர் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.

முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடந்த ஆட்சிக் காலத்தில் காவல்துறையால் போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

அதேநேரத்தில், தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், மருத்துவர்கள் உள்ளிட்டஇதர பிரிவினர் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டுமென்று தமிழ்நாடு அரசை வற்புறுத்துகிறோம்.

போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, சட்டவிரோதமாக கூடுதல் என்ற அடிப்படையில்தான் பெரும்பாலான வழக்குகள் காவல் துறையால் போடப்படுகிறது.

எனவே, ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி வழங்குவது என்ற அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும். இதற்கேற்ப காவல்துறை கொள்கையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்துகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT