அமைச்சர் வெங்கட ரமணன்
சென்னை: குடும்ப வன்முறை வழக்கில் உணவுத் துறை அமைச்சர் வெங்கட ரமணனை டிச.5-ம் தேதி நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தமிழக அரசின் உணவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வருபவர் வெங்கடரமணன். இவரது மனைவி மீனாட்சி. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதன் கணவரும் அவரது தாயும் தன்னைக் கொடுமைப்படுத்து வதாகவும் வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாகவும் கூறி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார். மேலும் அமைச்சர் வெங்கட ரமணனிடம் இருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தருமாறும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு சைதாப்பேட்டை 17-வது நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்காக மீனாட்சி நேரில் ஆஜரானார். ஆனால், அமைச்சர் ஆஜராகாததால் டிச.5-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் அன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மீனாட்சி பேசும்போது, “கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் விஜய் ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு, அவரிடம் கணக்காளராகப் பணியாற்றிய வெங்கடரமணன் மீது சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, கருவில் இருந்த 3-வது குழந்தையை கலைத்துவிட்டு வந்தால் சேர்த்துக் கொள்வதாகக் கூறி என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினார்கள்.
கடந்த 7 மாதங்களாக யாரும் என்னை அழைத்து பேசவில்லை. அமைச்சரான பிறகு வெங்கடரமணன் என்னிடம் பேசவே மறுத்துவிட்டார். எனது குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்கக் கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளேன். இவ்வழக்கு டிச.4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது” என்றார்.