வலது: கயல்விழி | கோப்புப் படம்

 
தமிழகம்

வழக்கு ரத்து கோரி கயல்விழி மனு - காவல் துறை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

வங்கி மேலாளரை அறைந்ததாக வழக்கு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பாரத ஸ்டேட் வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மு.க.அழகரியின் மகள் கயல்விழி தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை அடையார் பாரத ஸ்டேட் வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜரான கயல்விழியை கைது செய்த போலீஸார் சொந்தப் பிணையில் விடுவித்தனர்.

இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி கயல்விழி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘இந்த விவகாரம் முழுக்க முழுக்க உரிமையியல் விவகாரம். ஆனால் இதற்கு குற்றவியல் வழக்காக மாற்றப்படுகிறது.

வங்கி மேலாளர்தான் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். அதனை மறைத்து எனக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட விவகாரத்தை நேரில் பார்த்த சாட்சியாக கூட இல்லாத நபர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கயல்விழி தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவுக்கு, காவல் துறை மற்றும் மண்டல தலைமை மேலாளர் நமச்சிவாயம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.16-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT