தமிழகம்

4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கு: சபாநாயகர், சட்டப்பேரவை செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: 4 அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க சபாநாயகர், சட்டப்பேரவை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, கொறடா உத்தரவை மீறி, அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது தொடர்பான தகுதி நீக்க விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் மதுராந்தகம் மரகதம் குமாரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோரின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கில் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, சபாநாயகர் சட்டப்பேரவை செயலாளருக்கு உத்தரவிட்டு, வழக்குகளின் விசாரணையை ஜூன் 29 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

SCROLL FOR NEXT