சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் ராம் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமாக 377 கிரவுண்ட் நிலம் அப்பகுதியில் இருந்தது.
அதில் 123 கிரவுண்ட் நிலம் 126 பேருக்கு நகர வாடகைதாரர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விற்கப்பட்டுள்ளது. 34 கிரவுண்ட் நிலத்தை அறநிலையத்துறை நேரடியாக பலருக்கும் முறைகேடாக விற்பனை செய்துள்ளது. கோயிலுக்கு சொந்தமான நிலம் தனிநபர்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
எனவே அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ. மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அறநிலையத்துறை தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.வி. பாலசுப்பிரமணியம் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர். பரணிதரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இது குறித்து விசாரிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வட்டாட்சியர், நில அளவைத் துறை இயக்குநர், மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்கிறோம்.
இந்த குழு கோயில் நிலத்தைக் கண்டறிந்து 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.