கோவை: கோவை அருகே கல்லூரி மாணவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கி்ல், சக மாணவர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் சிலரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வள்ளலார் வீதியைச் சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் அமுதன்(19). இவர், கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், ஒத்தக்கால் மண்டபத்தில் அறை எடுத்து தங்கியிருந்தார்.
நேற்று (ஆக.11) அமுதன் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீமன்(19) ஆகியோர் கல்லூரி அருகே நடந்து சென்ற போது, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த ஒரு கும்பல் அமுதனை அழைத்துச் சென்றனர்.
அதிகாலை நேரத்தில் அறையில் எங்களது அறையில் நுழைந்து செல்போனை பறித்துச் சென்று நீதானே எனக் கேட்டு சரமாரியாக அமுதனை தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் அன்றைய தினம் மதியம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீஸார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரித்து, அமுதனை தாக்கியதில் தொடர்புடைய கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவைச் சேர்ந்த ஆராமுதன்(20), சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த அரவிந்த்(21), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த சிவரோகித்(20), பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தைச் சேர்ந்த மணிபாலு(20), திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை இன்று (ஆக.12) கைது செய்தனர்.
கோவை மாவட்ட போலீஸ் உயரதிகாரிகள் கூறும்போது, ‘‘கல்லூரியில் அமுதன் தரப்பினருக்கும், சீனியர் மாணவர்களுக்கு இடையே மோதல் அடிக்கடி ஏற்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 10-ம் தேதி அதிகாலை அமுதன் உள்ளிட்ட 6 பேர், கல்லூரியில் படிக்கும் மாணவர் தீபக்கின் அறையில் நுழைந்து அவரை தாக்கி செல்போனை பறித்துள்ளனர்.
பின்னர், அன்றைய தினம் அமுதனை எதிர் தரப்பினர் பிடித்து செல்போன் பறித்த சம்பவம் தொடர்பாக கேட்டு தாக்கியுள்ளனர். அதில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக 14 பேர் வரை கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. தற்போது வரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் தகவல் தெரிவித்ததால் தாக்குதல் உள்ளிட்டவை தவறான தகவல்கள்’’ என்றனர்.
கல்லூரியின் முதல்வர் ஜே.ஜெயா கூறும்போது, ‘‘ஜூலை 11-ம் தேதி இரவு தாமதமாக விடுதிக்கு வந்ததை கேட்டதால் அமுதன், அஜீஸ் விடுதியிலிருந்த சமையலரை தாக்கியதால், கல்லூரி ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்தனர். மாணவர்கள் தவறை ஒப்புக் கொண்டனர். இருவரின் பெற்றோரும் நேரில் வரவழைக்கப்பட்டனர். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் தவறுக்காக மன்னிப்புக் கடிதம் கொடுத்தனர். தொடர்ந்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆக.11-ம் தேதி நேரில் வந்து நிர்வாகத்தை சந்திக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. மாணவர் உயிரிழந்த விவகாரம் போலீஸார் மூலமாகவே கல்லூரிக்கு தெரியவந்தது. போதைப்பொருள் பயன்பாட்டை தெரிவித்ததால் இத்தாக்குதல் நடந்தது என்பதில் உண்மையில்லை’’என்றார்.