இபிஎஸ்
சென்னை: ‘முன்னாள் முதல்வர் பழனிசாமி, தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளார். எனவே வருமான வரித்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எடப்பாடி தொகுதி வாக்காளரான சக்திவேல் பெருமாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி, அத்தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ-வாகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை முழுமையாக தெரிவிக்காமல் மறைத் துள்ளார். பல்வேறு தனியார் நிறுவனங்களில் இருந்து அவரது மனைவிக்கு கிடைக்கும் வருமானம் குறித்த தகவல்களை வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை.
கடந்த 2021 தேர்தலின்போது இந்து கூட்டு குடும்ப சொத்தாக 3 ஆயிரத்து 900 சதுரஅடி வீடு இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சொத்து தனது மனைவியின் பெயரில் மாற்றப்பட்டதை தற்போதைய வேட்புமனுவில் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். நெடுங்குளம் கிராமத்தில் விவசாய நிலத்தை வாங்கியதற்கான நிதி ஆதாரங்களும் குறிப்பிடப்படவில்லை.
அவர் கடந்த 2021 மற்றும் 2026-ம் ஆண்டுகளில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களை ஒப்பிட்டுப்பார்த்தாலே பல்வேறு குளறுபடிகள் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாதது தெரிய வரும். எனவே சொத்து விவரம் குறித்த உண்மைத் தகவல்களை வேட்புமனுவில் மறைத்துள்ளது குறித்து வருமான வரித்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனு விரைவில்விசாரணைக்கு வரவுள்ளது.