சென்னை: பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை சிரமத்துக்குள்ளாக்கி தமிழக முதல்வரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞரும், சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலருமான கவிகணேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ``தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 22 அன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை வெயிலில் நிற்க வைத்து தவெக கட்சி, கொடி, சின்னங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சிகளில் மாணவர்களிடம் பிறந்தநாள் வாழ்த்து பாடவும், கோஷம் போடவும் வற்புறுத்தியுள்ளனர். குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் தவெக தலைவரின் முக வடிவில் சுமார் 3 ஆயிரம் மாணவர்களை வெயிலில் அமர வைத்துள்ளனர்.
கல்வி நிலையங்களில் மாணவர்களை அரசியல் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்துவது என்பது கல்வி நிறுவனங்களின் நோக்கத்துக்கு விரோதமானது. ஏற்கெனவே கல்வி நிறுவனங்களில் அரசியல், மத சித்தாந்தம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகளை நடத்த தடை விதித்து பிறப்பித்த அரசாணையை கண்டிப்பான முறையில் அமல்படுத்த உத்தர விட வேண்டும்.
அத்துடன் தமிழகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களை சிரமத்துக்குள்ளாக்கி அரசியல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், பள்ளிகள், கல்லூரிகள் என கல்வி நிலையங்களில் அரசியல் சித்தாந்த நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கும் விதிகளை கண்டிப்பான முறையில் அமல்படுத்த உத்தரவிட வேண்டும், என வாதிட்டார். அதையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.