சென்னை: போலி ஆவணங்கள் மூலம் தாம்பரம் அகரம்தென் கிராமத்தில் ரூ.300 கோடி மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நில மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒரு வாரத்துக்குள் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அகரம்தென் கிராமத்தில் சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்த சந்தானம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
‘அகரம்தென் ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ள சிலர் இணைந்து போலியான வாரிசு சான்று, இறப்புச் சான்றிதழ்கள், போலியான பட்டாக்களை உருவாக்கி அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர்.
தேர்தலுக்கு நிதி
இவ்வாறு ஆக்கிரமித்துள்ள நிலங்கள் மீது ரூ.3 கோடி வரை வங்கிகளில் கடன் பெற்று தேர்தலுக்கு நிதி வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த் துறை, பதிவுத் துறை அதிகாரிகளின் துணையோடு நடைபெற்ற இந்த நில மோசடி குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் தாம்பரம் காவல் ஆணையர் தகுந்த விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘இந்த நில மோசடியில் திமுக முன்னாள் அமைச்சரின் சகோதரி, மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களின் தொடர்பு இருப்பதால் காவல் துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்று வாதிடப்பட்டது.
தவறினால் சிபிஐ விசாரணை
இதையடுத்து நீதிபதி, அரசு நில மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார். நடவடிக்கை எடுக்க தவறினால் சிபிஐ விசாரிக்க உத்தரவிட நேரிடும் என எச்சரித்து வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.