சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழக நிதி அமைச்சராக மரிய வில்சன் பதவி வகிக்கிறார். இந்நிலையில், அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி அத்தொகுதி வாக்காளரான மருது கணேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதேபோல திருவெறும்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி என்ற விஜயகுமாரின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷும், திண்டுக்கல் தொகுதியில் வெற்றி பெற்ற ஐ.பி.செந்தில் குமாரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் நாசிர் ராஜாவும் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும், திருவள்ளூர் தொகுதியில் தவெக எம்எல்ஏ டி.அருண்குமார் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரனும், மொடக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ டி.சண்முகம் வெற்றியை எதிர்த்து வாக்காளர் கே.பெரியசாமியும், பர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆர்.சி.கோவிந்தராஜன் வெற்றியை எதிர்த்து வாக்காளரான சி. கீதாவும் தேர்தல் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, இந்த வழக்குகள் தொடர்பாக அமைச்சர் மரியவில்சன் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட எம்எல்ஏ-க்கள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டார். இதேபோல, கோபிசெட்டிபாளையத்தில் வெற்றி பெற்ற அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிராக அதிமுக வேட்பாளர் வி.பி.பிரபு, மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற சி. வி. சண்முகத்துக்கு எதிராக வாக்காளரான கமலக்கண்ணன், ஜோலார்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்றுள்ள கே.சி.வீரமணிக்கு எதிராக வாக்காளர் ராமமூர்த்தி ஆகியோரும், திருமயம் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் சின்னதம்பி மற்றும் வாக்காளரான பொன் பன்னீர் செல்வமும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தவெக எம்எல்ஏ சீனிவாசசேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக முன்னாள் அமைச்சரான கே.ஆர். பெரியகருப்பனும் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இந்த மனுக்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.