சென்னை: துறைமுகம் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ரூ.10 ஆயிரத்துக்கான கூப்பன் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் சேகர்பாபு போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிடும் ராயபுரம் மனோ என்ற மனோகருக்கு ஆதரவாக தொகுதி முழுவதும் ஒவ்வொரு வீட்டுக்கும் க்யூ-ஆர் கோடுடன் கூடிய ரூ.10 ஆயிரத்துக்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறி வழக்கறிஞர் கே.ரவீிந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், இதுதொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் பறக்கும்படையினர் சோதனை நடத்தியதாகவும், ஆனால், மனுதாரர் கூறியதுபோல எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், இதுதொடர்பாக போலீஸாரின் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.