சென்னை: தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ அன்னியூர் சிவா மீது சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக வழக்கறிஞரான ஜி.எஸ்.மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ``கடந்த 2024-ல் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா வெற்றி பெற்று எம்எல்ஏவானார்.
சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலம் தொகுதிக்கு ஆண்டு தோறும் ரூ.3 கோடி ஒதுக்கப்படுகிறது. இதன் நோக்கம் பொதுமக்களுக்கு சாலை, குடிநீர், கழிப்பறை, தெருவிளக்கு போன்ற அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதே.
ஆனால் விக்கிரவாண்டி தொகுதியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.36 கோடி, திமுக எம்எல்ஏ அன்னியூர் சிவாவின் குடும்ப உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படும் தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தவிர முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.25 கோடி நிதியும் அந்த நிறுவனத்துக்கே வழங்கப்பட் டுள்ளது. இடைத்தேர்தலுக்கு முன்பாக அந்த நிறுவனத்தில் எம்எல்ஏ அன்னியூர் சிவாவின் மனைவியும், மைத்துனரும் பங்குதாரர்களாக இருந்துள்ளனர்.
ஆனால் திமுக எம்எல்ஏ-வாக வெற்றி பெற்ற பிறகு அந்நிறுவனத்தின் பங்குதாரராக அவரது மனைவிக்குப் பதிலாக தாயார் சேர்க்கப்பட்டுள்ளார். அந்நிறுவனத்தின் வருமானம் திடீரென ரூ.7 கோடியைத் தாண்டியுள்ளது.
எனவே அதிகார துஷ்பிரயோகம், பொது நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் திமுக எம்எல்ஏ அன்னியூர் சிவா மீது சிபிஐ விசாரணைக்கு அல்லது உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்'' என அதில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.