கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ்
கள்ளக்குறிச்சி: பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால், அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் உள்ள எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டுக்குச் சென்ற தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ்வரன் தலைமையிலான போலீஸார், எம்எல்ஏவிடம் விசாரணை நடத்தினர். பின்னர் காவல் துறையில் விசாரித்தபோது, ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ மீது 3 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், அதிகாரியின் புகாரின் பேரில் தற்போது எஃப்ஐஆர் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. பிஎன்எஸ் 75, 78, 79 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த முதல் தகவல் அறிக்கையில், பாலியல் நோக்கமுள்ள இரட்டை அர்த்தப் பேச்சுகள் அல்லது கருத்துகள் தெரிவிப்பது, பெண் விருப்பமில்லை என்று தெளிவாகத் தெரிவித்த பிறகும் தொடர்ந்து பின்தொடர்வது. மீண்டும் மீண்டும் தொடர்புகொள்ள முயற்சிப்பது. இணையம், மின்னஞ்சல் அல்லது பிற மின்னணு தகவல் தொடர்புகளைத் தொடர்ந்து கண்காணிப்பது. பெண்ணை அவமதிக்கும் நோக்கத்துடன் வார்த்தைகளைப் பயன்படுத்துதல். பெண்ணின் தனிப்பட்ட உரிமை மற்றும் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளனர்.
அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றன காவல் துறை வட்டாரங்கள்.
முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு இரு மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி எம்எல்ஏ விரும்பத்தகாக குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியதாகவும், அவரை பின்தொடர்ந்து பாலியல் ரீதியாக அணுகியதாகவும் தகவல்கள் வெளியாயின. இது தொடர்பாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டு விமர்சனங்களும் எழுந்தன. திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்டக் கட்சியினரும் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனிடையே, அதிமுக பெண் வழக்கறிஞரான ஆர். த்ரிசூலி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்திடம், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கை வடக்கு மண்டல ஐஜி கண்காணிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது கவனிக்கத்தக்கது.