சென்னை: ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப்பதிவுக்கான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பொதுமக்களே நேரடியாக ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் நடைமுறை செப்.15 முதல் அமல்படுத்தப்படும் என முதல்வர் விஜய் சட்டப்பேரவை யில் செப்.2 அன்று அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, செப்.12 முதல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப்பதிவுக்கான சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் அனுப்ப வேண்டுமெனவும், சான்றிதழ்களை விண்ணப்பதாரர்களுக்கு கார்டு வடிவில் அச்சிட்டு அனுப்பும் முறை ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து பெங்களூருவைச் சேர்ந்த ஃபோர்ஸ் ஐடென் டிபிகேஷன் லிமிடெட் என்ற நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், ‘‘தமிழக அரசின் டிஜிட்டல் மயமாக்கும் முடிவு மத்திய அரசின் சட்டங்களுக்கு விரோதமானது என்பதால் தமிழக அரசின் இந்த திட்டத்தை செயல்படுத்த தடை விதி்க்க வேண்டும்’’ எனக் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘தமிழக அரசின் இந்த டிஜிட்டல் மயம் காரணமாக செல் போன் மற்றும் ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் வாகனப்பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களைப் பெற இயலாது என்பதால் முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்த தடை விதிக்க வேண்டும்.
அத்துடன் கூடுதலாக பழைய நடைமுறைப்படி அச்சிடப்பட்ட கார்டு வடிவ முறையையும் பின்பற்ற உத்தரவிட வேண்டும்’’ என வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச்சான்றுக்கான பழைய நடைமுறை செப்.12 முதல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த ஆவணங்களை இ-சேவை மையம் மூலமாக பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், மத்திய அரசின் பாரிவாகன் இணையதள சேவை மூலமாகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள் ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், ராஜஸ்தான், கேரளம், அஸ்ஸாம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் ஏற்கெனவே முழுமையாக டிஜிட்டல் மயமாக்கலுக்கு மாறியுள்ள நிலையில் அந்தப் பட்டியலில் தமிழகமும் 7-வது மாநிலமாக இணைந்துள்ளது என்றும், ஊழலை ஒழிக்கவும், வீட்டில் இருந்தபடி விண்ணப்பித்து இந்த சேவையை பொதுமக்கள் விரைவாக பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசு 2 வாரத்தில் விரிவாக பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.