தமிழகம்

கருப்பு முருகானந்தம் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு: புகார் கொடுத்த பெண் மீது பணமோசடி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

திருச்சி/திருவாரூர்: பெங்களூருவைச் சேர்ந்த திவ்யா சேஷாத்ரி (45), தமிழக பாஜகவில் பிற்படுத்தப்பட்டோர் அணி மாநிலச் செயலாளராக இருந்தார். திருச்சியில் வசித்து வந்த இவர், பாஜகமாநில பொதுச்செயலாளராக இருந்த கருப்பு முருகானந்தம் மீது பாலியல் புகார் கூறினார். இதையடுத்து, இருவரும் கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், திவ்யா சேஷாத்ரி செப்.24-ம் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கருப்பு முருகானந்தம் மீது புகார் அளித்தார். அதில், கருப்பு முருகானந்தமும், நானும் மிக நெருக்கமாக பழகி வந்தோம். பெங்களூருவில் இருந்த எனது சொத்து அனைத்தையும் அவருக்கு வேண்டப்பட்டவருக்கு எழுதிக் கொடுக்க வைத்தார். மேலும் என்னை இழிவுபடுத்தும் வகையில் மார்பிங் புகைப்படங்கள், வீடியோக்களை பரப்பிவருகிறார். எனவே, கருப்பு முருகானந்தம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதன்பேரில், ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸார் நேற்று முன்தினம் கருப்பு முருகானந்தம் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே, திவ்யா சேஷாத்ரி தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதுடன், ரூ.50 லட்சம் பறித்ததாக, திருவாரூர் எஸ்.பி. அலுவலகத்தில் திருவாரூர் கேக்கரை கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் ராஜா என்பவர் புகார் தெரிவித்துள்ளார். அதில், ‘‘பாஜக மகளிரணி பொறுப்பாளராக இருந்த திவ்யா சேஷாத்திரி, 2024-ல் எனக்கு பழக்கமானார். அப்போது, தனது கணவர் கொடுமைப்படுத்துவதாகவும், அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார்.

இதனால் இருவரும் சில மாதங்கள் திருவாரூரில் வசித்து வந்தோம். அப்போது, நான் நடத்திவரும் நிறுவனத்துக்கு உரிமம் பெற்றுத் தருவதாக கூறியதால் அவர் மூலம் ரூ.20 லட்சம் கொடுத்தேன். பின்னர், போனில் பேசிய திவ்யா சேஷாத்திரி, நெருக்கமாக இருந்த புகைப்படங்களை காட்டி மிரட்டி, தான் கர்ப்பமாக உள்ளதாகக் கூறி, கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பழனி உள்ளிட்டோர் மூலம் ரூ.30 லட்சத்தை பெற்றுக்கொண்டார். என்னை ஏமாற்றிய திவ்யா சேஷாத்ரி மீது நடவடிக்கை எடுப்பதுடன், ரூ.50 லட்சத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT