விஜய் | கோப்புப் படம்

 
தமிழகம்

முதல்வர் விஜய் மீது தொடரப்பட்ட வழக்கு வாபஸ்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: வருமானத்தை மறைத்ததாக வருமான வரித் துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் முதல்வர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வரும், நடிகருமான விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ‘புலி’ படத்துக்கு சம்பளமாக பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, விஜய்க்கு வருமானவரித் துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து முதல்வர் விஜய் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், முதல்வர் விஜய் வீட்டில் வருமானவரித் துறை நடத்திய சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து முதல்வர் விஜய்க்கு எதிராக வருமானவரிச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும், வருமானத்தை மறைத்ததற்காக மோசடி, குற்றச்சதி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரியும், கொடுங்கையூரைச் சேர்ந்த எம்.ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும், இதுதொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த தேவையான முகாந்திரம் உள்ளதா என்பதை ஆராயும் வகையில், வழக்கின் ஆவணங்களை அமலாக்கத் துறை இயக்குநரகத்துக்கும் அனுப்ப உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள் வழக்கை திரும்பப்பெற அனுமதியளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT