சென்னை: முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக திமுக-வைச் சேர்ந்த ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் உள்பட ஆயிரம் பேர் மீது சைதாப்பேட்டை போலீஸார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக மற்றும் மறைந்த தலைவர் மு.கருணாநிதி உள்ளிட்டோரை முதல்வர் விஜய் விமர்சித்து பேசியதை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை சைதாப்பேட்டையில், கலைஞர் வளைவு அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆ.ராசா சர்ச்சைக்குரிய வகையில் முதல்வர் குறித்து விமர்சித்தார். இது விமர்சனங்களுக்கு உள்ளானது. இதுஒருபுறம் இருக்க சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை.
இதையடுத்து, திமுக நிர்வாகிகளான ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் உள்பட போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது, தடையை மீறி சட்ட விரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.