சென்னை: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, காங்கிரஸ் எம்எல்ஏ தாரகைகத்பட், தவெக எம்எல்ஏ-க்களின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ-க்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரான எ.வ.வேலு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளரான அருள் ஆறுமுகத்தைவிட 2 ஆயிரத்து 455 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதையடுத்து எ.வ.வேலு வெற்றி பெற்றதை எதிர்த்து அருள் ஆறுமுகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல, பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ-வாக வெற்றி பெற்ற எஸ்.ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தார்.
அவரிடம் 9 ஆயிரத்து 693 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக வேட்பாளரான தோப்பு வெங்கடாச்சலம், ஜெயக்குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ-வாக தாரகை கத்பட் வெற்றி பெற்றதை எதிர்த்து அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் அந்தோணி முத்துவும், ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சி.கீதாவும், சேலம் வடக்கு தொகுதி தவெக எம்எல்ஏ கே.சிவக்குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.ராஜேந்திரனும், சீர்காழி தொகுதி மதிமுக எம்எல்ஏ ஆர்.செந்தில்செல்வன் வெற்றியை எதிர்த்து எஸ். வாசு என்பவரும் தேர்தல் வழக்குகளை தொடர்ந்திருந்தனர்.
இந்த தேர்தல் வழக்குகளை விசாரித்த நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட எம்எல்ஏ-க்கள் மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 21-க்கு தள்ளி வைத்துள்ளார்.
இதேபோல, போடி நாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம், வெற்றி பெற்றதை எதிர்த்து டி.கண்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் மாவட்ட நூலக கண்காணிப்பாளராக பணிபுரிந்ததை சுட்டிக்காட்டி தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டதால், ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும், என அதில் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.