நிதியமைச்​சர் மரிய​வில்​சன்

 
தமிழகம்

வீடு புகுந்து தாக்கிய வழக்கு - அமைச்சர் மரிய வில்சனின் சமரச முயற்சி தோல்வி

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கில் சமரச பேச்சுவார்த்தையில் விருப்பமில்லை என அவரது சகோதரர் மனைவி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்‌.

புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த வழக்கில் சமரச தீர்வு மையத்தை அணுகி தீர்வு காண சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, நான்கு முறை சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கில் புகார்தாரரான மரிய வில்சனின் சகோதரர் மனைவி கெரோலின் நேரில் ஆஜராகியிருந்தார். அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் சமரச பேச்சுவார்த்தை நடத்த புகார்தாரருக்கு விருப்பமில்லை என்றும், முன்பு நீதிபதியே சமரச தீர்வு மையத்தை அணுக கூறியதால் அதை மறுக்க முடியவில்லை என விளக்கமளித்தார்.

மரியவில்சன் தரப்பில், ஒரு பிரச்சினை தவிர மற்ற அனைத்துக்கும் தீர்வு எட்டப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், புகார்தாரர் சமரசத்துக்கு விரும்பாத நிலையில், சமரச தீர்வு மையத்தில் தீர்வு காணும்படி நிர்பந்திக்க முடியாது என்பதால், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீது விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

அப்போது, சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டியுள்ளதால், ஆகஸ்ட் 21 ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என மரியவில்சன் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதை ஏற்று, 21 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக மரியவில்சனுக்கு விலக்களித்த நீதிபதி, பேச்சுவார்த்தைக்கு புகார்தாரர் விரும்பாததால், சமரச பேச்சுவார்த்தையை நீட்டிக்க அனுமதி கோரிய சமரச தீர்வு மைய கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மரிய வில்சனின் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT