மதுரை: பிரதமர் மோடி குறித்து அவதூறு காணொலி வெளியிட்டதாக அமைச்சர் மனோ தங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த நீதிபாண்டியன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தனது முகநூல் பக்கத்தில், எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடியின் பெயர் இடம் பெற்றிருப்பதாக தெரிவித்து வீடியோ ஒன்றைப் பதிவேற்றம் செய்தார்.
அவர் பதிவேற்றம் செய்த காணொலி போலியானது என உண்மை கண்டறியும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் அந்த வீடியோவை அமைச்சர் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அமைச்சரின் முகநூல் பதிவு சில நிமிடங்களில் பல லட்சம் பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது. இதனால் சமூக ஒற்றுமைக்கும், பொது அமைதிக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சரின் இந்த நடவடிக்கை பிஎன்எஸ் சட்டப்படி 2 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும். இது தொடர்பாக அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
போலீஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது புகாரின் அடிப்படையில் அமைச்சர் மனோதங்கராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி எல். விக்டோரியா கௌரி விசாரித்து, சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.