தமிழகம்

மரண தண்டனைக்கு எதிராக வழக்கு - உச்ச நீதிமன்றத்தை அணுக ஐகோர்ட் உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை: வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் பொய் சாட்சியம் அளிப்போருக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்பதை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தவரை உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருச்சியைச் சேர்ந்த ஷாஸிம் சாகர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நாட்டில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தில் 1989-ல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தின் 3(2)(ஐ) பிரிவில் பட்டியலின அல்லது பழங்குடியினர் பிரிவைச் சாராத ஒருவர் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பட்டியலினத்தவருக்கு எதிராக பொய் சாட்சியம் அளித்தால் அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் மரன தண்டனை அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பின் 32-வது பிரிவின் கீழ் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது.

எனவே, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் மரண தண்டனை விதிக்கும் பிரிவை செல்லாது என அறிவிக்கவும், அதுவரை அந்தப் பிரிவைச் செயல்படுத்தத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு விசாரித்தது. ‘மத்திய அரசுத் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் 2019 மற்றும் 2023-ல் இதே கோரிக்கையுடன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.

இந்த மனுவை அந்த மனுக்களுடன் சேர்த்து விசாரிக்கலாம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை அணுகி தேவையான நிவாரணம் பெறலாம்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT