சிவகாசி: சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்படாத நிலையில், குழந்தைகளை கவரும் வகையில் கார்ட்டூன் வடிவ பேன்ஸி பட்டாசுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன.
சிவகாசி பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்று 1,100-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. சிவகாசியில் தொடக்க காலத்தில் சட்டி, சக்கரம், ஓலை வெடி, மத்தாப்பு, சாட்டை ரக பட்டாசுகள்தான் 100 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டன.
ஆனால் தற்போது இரவில் பல வண்ணங்களில் ஒளிரும் வானில் 100 அடி உயரம் வரை சென்று வெடிக்கும் பேன்ஸி ரக பட்டாசுகள்தான் 80 சதவீதத்துக்கும் மேல் உற்பத்தி செய்யப்படுகிறது. சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளில் 10 சதவீதம் தமிழகத்திலும், 90 சதவீதம் பிற மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை (ஆப் சீசன்) வடமாநில பண்டிகை மற்றும் திருவிழாக்களை குறிவைத்து உற்பத்தி நடைபெறும். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தீபாவளி சீசன் விற்பனைக்காக பிரத்யேக பட்டாசு உற்பத்தி நடைபெறும். அப்போதுதான் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் விரும்பும் வெரைட்டி பட்டாசுகள் மற்றும் புதிய ரக பேன்ஸி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படும்.
இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை, சஸ்பென்ட் செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், அதிகாரிகள் ஆய்வு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளால் மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பட்டாசு உற்பத்தி முற்றிலும் முடங்கியது. இதனால் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 40 சதவீதம் வரை பட்டாசு உற்பத்தி குறைந்துள்ளது.
புதிய ரக பட்டாசுகளை பொருத்தவரையில் கூடுதல் நேரம் ஆகும் என்பதால் இந்த ஆண்டு பெரிய அளவில் புதிய ரகங்கள் உற்பத்தி செய்யப்படவில்லை. இதனால் வழக்கமான பேன்சி ரக பட்டாசுகள் பல்வேறு கார்ட்டூன் வடிவங்களில் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் ராணுவ பீரங்கி, குல்பி ஐஸ், வாத்து, பட்டாம்பூச்சி, யானை, பெங்குவின், சிங்கம், புலி, கரடி, நரி, குங்பூ பாண்டா, குரங்கு, ஆங்க்ரி பேர்டு, பவர் ரேஞ்சர்ஸ், ரேஸ் கார் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் பேன்ஸி ரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இவ்வகை கார்ட்டூன் வடிவ பட்டாசுகள் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை அதிகம் கவர்ந்துள்ளன.
மத்தாப்பு ரக பட்டாசுகளில் பல்வேறு வண்ணங்களில் ஒளிர்தல், சரவெடி போல் சத்தத்துடன் தீப்பொறி வரும் வகையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஒரே பட்டாசில் புஸ்வாணம், சக்கரம் என இரண்டும் ஒரே நேரத்தில் வெடிக்கும் வகையில் தாயார் செய்யப்பட்டுள்ளது. வானில் உயரச் சென்று வெடிக்கும் பேன்ஸி பட்டாசுகளில் கையில் பிடித்துக் கொண்டு வெடிக்கும் பட்டாசு, பென்சில் ரக பட்டாசு வேல் மற்றும் வாள் வடிவிலும், பாதுகாப்பாக வெடிக்கும் வகையில் கையில் கைப்பிடி உடன் தயார் செய்யப்பட்டு, கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.