தமிழகம்

கார் பார்க்கிங் கூடமான மதுரை சாலைகள்: விதிமீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகரில் சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்களில் போதுமான ‘பார்க்கிங்’ வசதியில்லாமல் சாலைகளில் பகிரங்கமாக கார்களை பல மணி நேரம் நிறுத்திச் செல்வதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகி வருகிறது. அரசியல் பின்புலத்தால் மாநகர காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை, உள்ளூர் திட்ட குழுமம், மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கண்டும், காணாமல் கடந்து செல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரையில் உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயில், அழகர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில், திருமலைநாயக்கர் அரண்மனை, காந்தி அருங்காட்சியகம் போன்ற ஆன்மிக மற்றும் பொது சுற்றுலா தலங்களும் ஏராளம் உள்ளன.

மதுரை சமீப காலமாக பாரம்பரியமான மற்றும் ருசியான உணவுகளுக்கு பிரசித்திப்பெற்றதாக திகழ்வதால், வெளியூர் செல்லும் மக்கள் கூட இந்நகருக்கு தற்போது மாலை, இரவு நேரங்களில் உணவு சுற்றுலாவுக்காகவும் வந்து செல்கிறார்கள்.

அவ்வாறு உணவு சுற்றுலாவுக்காக வருபர்கள், மாநகர் பகுதியில் தங்கள் பொருளாதார வசதிக்கு தகுந்தார் போல் பிடித்தமான ஹோட்டல்களில் சென்று சாப்பிட்டுவிட்டு தாங்கள் போக வேண்டிய இடங்களுக்குச் செல்கிறார்கள். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வருகை அதிகரிப்பால் அவர்களைக் குறி வைத்து தற்போது மாநகரில் ‘ஷாப்பிங்’ மால்கள், ஹோட்டல்கள், சிறிய பெரிய ஜவுளிக்கடைகள் மற்றும் சினிமா தியேட்டர்களும் தொடங்கப்படுகின்றன.

கடந்த காலத்தில் மாநகராட்சி நிர்வாகம், நகரமைப்புப் பிரிவு சார்பில் ‘பார்க்கிங்’ இல்லாத வணிக வளாகங்கள், ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கி, அவர்களை வாகனங்களை நிறுத்த பார்க்கிங் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தார். அதன்பிறகு இந்த நடவடிக்கை கைவிடப்பட்டதால் மாநகராட்சிப் பகுதியில் மாநில நெடுஞ்சாலை, மாநகராட்சி சாலைகளில் மீண்டும் ‘பார்க்கிங்’ இல்லாத ஹோட்டல்கள், ஜவுளிக்கடைகள், வணிக வளாகங்கள் தொடங்குவது அதிகரித்துள்ளது.

அதனால், இரவு நேரங்களில் சினிமா தியேட்டர்கள், மால்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், ஜவுளிக்கடைகளுக்கு கார்கள், இருசக்கர வாகனங்களில் வருவோர், அங்கு போதுமான ‘பார்க்கிங்’ வசதி இல்லாமல், வாகனங்களைப் பல மணி நேரம் சாலைகளிலேயே நிறுத்திச் செல்கிறார்கள்.

ஆயுத பூஜையை முன்னிட்டு, கடந்த சனிக்கிழமை தொடர் விடுமுறை நாட்களாக இருந்ததால், மதுரை மாநகர்ப் பகுதியில் ஆன்மிகச் சுற்றுலா, உணவுச் சுற்றுலா மற்றும் பொழுதுப்போக்கு சுற்றுலாவுக்காக உள்ளூர், வெளியூர் மக்கள், அதிகளவில் மாநகரப்பகுதிகளில் கார்களில் வந்து சென்றனர்.

சினிமா தியேட்டர்களிலும் மக்கள் கூட்டம் குடும்பத்தோடு அலைமோதியது. வழக்கத்திற்கு மாறான கூட்டத்தால், போதுமான பார்க்கிங் வசதியில்லாத சினிமா தியேட்டர்கள், மால்கள், ஜவுளிக்கடைகளிலும், ‘பார்க்கிங்’ வசதியே இல்லாத ஹோட்டல்களிலும் கார்களில், இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள், சாலைகளைகளிலே ‘பார்க்கிங்’ செய்து செல்கிறார்கள். கோகலே சாலை, நத்தம் சாலை, தாமரைத்தொட்டி பாரதி உலா வீதி, மாவட்ட நீதிமன்றம் சாலைகளில் உள்ள ஹோட்டல்கள், சினிமா தியேட்டர்களுக்கு நேற்று இரவு வந்த நூற்றுக்கணக்கானோர் மிக தைரியமாகவும், பகிரங்கமாகவும் இந்த சாலைகளில் தங்கள் கார்களை பல மணி நேரம் பார்க்கிங் செய்து சென்றார்கள்.

அப்போது மாநகரில் கனமழை பெய்ததால், சாலைகளில் இயல்பாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலைகளில் உள்ள வெள்ளத்தை கடந்து வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன. சாலைகளில் பல கி.மீ., தொலைவுக்கு நிறுத்தப்பட்ட இந்த கார்களால், நத்தம் சாலை, கோகலே சாலை, மாவட்ட நீதிமன்றம் சாலைகளில் ஒட்டுமொத்தமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஆங்காங்கே வாகனங்கள் சில விபத்துக்குள்ளாகி சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்பட்டன. சாதாரணமாக, சாலைகளில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள், ஹெல்மெட் இல்லாமல் செல்வோர் மீது வாகனங்களை நிறுத்த ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீஸார், சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து மாநகர காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “சாலைகளில் நிறுத்தப்பட்ட அனைத்து கார்களுக்கும் ‘நோ பார்க்கிங்’ அபராதம் ரூ.500 விதிக்கப்பட்டுள்ளது” என்றனர். அபராதம் விதிக்கப்பட்டதோடு, மாநகர காவல்துறை கடமையும், பொறுப்பும் முடிந்துவிட்டதா? என பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?- மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5,380 சதுர அடிக்கு மேலான மால்கள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், ஜவுளிக்கடைகளுக்கு உள்ளூர் திட்டம் குழுமம்தான், போதுமான ‘பார்க்கிங்’ வசதியிருக்கிறதா? என்று ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும்.

ஆனால், உள்ளூர் திட்டக்குழுமும், நேரடியாக ஆய்வு செய்யாமலேயே அரசியல் பின்னணியில், ‘பார்க்கிங்’ வசதியே இல்லாத ஹோட்டல்கள், ஜவுளிக் கடைகளுக்கு கூட அனுமதி வழங்கிவிடுகிறார்கள். பொது சுகாதாரத்துறை, மாநகராட்சி நகரமைப்பு துறை, மாநகர காவல்துறை, உள்ளூர் திட்டக்குழுமம் இணைந்து, ‘பார்க்கிங்’ இல்லாத கட்டிடடங்களுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனால், அனைத்து நிறுவன உரிமையாளர்களும் ஏதோ ஒரு அரசியல் பின்புலத்தி்ல் செயல்படுவதால், அரசு துறைகள் சமாணிய வாகன ஓட்டிகள், வியாபாரிகளிடம் காட்டும் ‘கறார்’ நடவடிக்கையை பெரும் நிறுவனங்கள் மீது காட்டுவதில்லை. மாதந்தோறும் ஆட்சியர் தலைமையில் நடக்கும் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு ஆய்வுக்கூட்டத்தில், ஆட்சியர் மாநகரின் ‘பார்க்கிங்’ பிரச்சினை பற்றி கேள்வி எழுப்பி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும்” என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT