சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரின் கார் ஓட்டுநர் சரவணன்.
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ரூ.400 கோடி முறைகேடு தொடர்பான வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரின் கார் ஓட்டுநர் சரவணன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி, கட்சி நிதி என்ற பெயரில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், பி.டி.அரசகுமார், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அன்பில் மகேஸின் ஜாமீன் மனுவை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவருக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு அன்பில் மகேஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் நேற்று ஆஜராகி முறையிட்டார். மனுவுக்கு எண் இடும் பணி முடிந்ததும், நவ.12-ம் தேதி (இன்று) விசாரணைக்கு ஏற்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
அதேபோல, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையையும், வில்சனின் கோரிக்கையை ஏற்று, நீதிபதி நவ.30-க்கு தள்ளிவைத்தார்.
காவலில் எடுக்க மனு
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரை 5 நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. வழக்கின் விசாரணை அதிகாரி செந்தில் சாட்சிக் கூண்டில் ஏறிபல்வேறு காரணங்களின் அடிப்படையில் முத்துக்குமாரை 5 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினார். இதையடுத்து, இந்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.
முத்துக்குமாரின் நீதிமன்றக் காவல் இன்று முடியும் நிலையில், காவல் நீட்டிப்புக்காக அவரை இன்று ஆஜர்படுத்தவும் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில், அன்பில் மகேஸ் தொடர்புடைய வழக்கில் போலீஸாரால் தேடப்பட்ட முத்துக் குமாரின் கார் ஓட்டுநர் சரவணன் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சத்திய மூர்த்தி முன்பு நேற்று சரணடைந்தார்.
அவரை நவ.25 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ரூ.400 கோடி முறைகேடு வழக்கில் முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரின் கார் ஓட்டுநரான சரவணன் மூலமாக பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக போலீஸார் கூறி வந்த நிலையில், தற்போது அவர் சரணடைந்துள்ளதால் வழக்கு விசாரணை இனி தீவிரமடையும் எனக் கூறப்படுகிறது.